உமையவளின் ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்தர் அவதரித்த தலத்தின் மகிமை தெரியுமா?

சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சீர்காழி சட்டைநாதர் ஆலயம்.


இத்திருத்தலம் 1000 ஆண்டுகளுக்கு முன் பழமையானது. மகாவிஷ்ணு மாவலிபால் குறள் வடிவாகச் சென்று மூன்றடி மண் யாசித்து விண்ணையும் மண்ணையும் ஈரடியால் அளந்து மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்துப் பாதாள உலகிற்குச் செலுத்தினார்.

அதனால் அவர் அகங்காரங் கொண்டு உலகு நடுங்கத்திரி வாராயினார். இஃதறிந்த வடுகநாதர் தமது திருக்கரத்தால் விஷ்ணுவை மார்பில் அடித்துப் பூமியில் விழ்த்தினார். இலக்குமி மாங்கலியப் பிச்சை வேண்டியவாறே இறைவனருள் செய்ய, விஷ்ணு உயிர் பெற்று எழுந்து வணங்கினார். அவர்தம் தோலையும், எலும்பையும் அணிந்து கொள்ள வேண்டுமென்று விண்ணப்பிக்க இறைவனும் எலும்பைக் கதையாகக் கொண்டு, தோலைச் சட்டையாகப் போர்த்து அருள்செய்தார். அதுமுதல் பெருமான் தண்டபாணி, சட்டை நாதர், வடுக நாதர், ஆபதுத்தாரணர் எனப் பல திருநாமங்களோடு விளங்கி வருகிறார்.

பிரளய காலத்தில் தோணியில் அம்மையும் அப்பனும் இங்கு வருவதால், இறைவன் தோணியப்பர் என்ற பெயரிலும், அன்னை பெரியநாயகி என்ற பெயரிலும் அருள்கின்றனர். இவர்கள் இருவரும் ஆலய சிறு குன்றின் நடுப்பகுதியில் வீற்றிருக்கிறார்கள். இவர்களே சம்பந்தருக்கு காட்சி தந்து ஆட்கொண்டவர்கள்.

ஊழிக்காலத்தில், இப்பேரண்டமே அழியும் போது எவ்வித அழிவும் ஏற்படாது நிலைத்து இருந்த இத்தலத்திற்கு இறைவனும், இறைவியும், பிரணவத்தையே தோணியாகக் கொண்டு, அனைத்து ஜீவராசிகளின் வித்துக்களுடன் எளுந்தருளி, இதனையே மூலாதார சேத்திரமாகக் கொண்டு, பிரம்மா முதல் அனைத்து ஜீவ ராசிகளையும் படைத்ததாகக் கூறுவர். இதிலிருந்து இத்தலத்தின் தொன்மையை நாம் அறியலாம். அது முதல் பல பிரம்மாக்கள் தோன்றி தங்கள் படைத்தல் தொழில் எவ்வித இடையூறின்றி நடைபெற, இறைவனை வழிபட்டு வருவதால் இத்தலத்திற்கு பிரம்மபுரம் என்ற பெயரும் உண்டு. அதனால் இத்தலத்து இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயரும், இறைவிக்கு திருநிலைநாயகி என்ற பெயரும் உண்டு.

வேத நெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க தெய்வத்திருமுறைகள் அருளிச் செய்த திருஞானசம்பந்தர் அவதரித்த தலம். இத்தலத்தை மிதித்தாலாகாது என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் நகரின் புறத்தே இருந்து, கழுமல வளநகர் கண்டுகொண்டேனே என்று பாடிச் சென்றுள்ளார். கற்ப காலத்திலும் அழியாது மூல ஆதார ஷேத்திரமாக இருந்து கயிலாய தரிசனம் வழங்கும் ஒரே ஷேத்திரமாகும்.

கைலாயத்தில் விளங்கும் பாரிஜாத மலரே இத்தலத்தின் தல விருட்சமாகும். குரு, லிங்க, சங்கமம் ஆகிய மூவகைத் திருமேனிகளைக் கொண்ட ஒரே தலம். திருஞான சம்பந்தர் சைவமும், தமிழும் தழைக்கவும், உலகம் உய்யவும் முருகப்பெருமானின் திரு அவதாரமாக அவதரித்தவர். சீர்காழித் திருத்தலத்தில் சிவபாத இருதயர்-பகவதி அம்மையாருக்கு மகனாகப் பிறந்த அவர், தன்னுடைய மூன்று வயதில் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்திற்கு தந்தையுடன் சென்றார். தந்தை அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடியபோது, சம்பந்தருக்கு பசி ஏற்பட்டது. அவர் ஆலயத்தையும், குளத்தில் மூழ்கி நீராடிக்கொண்டிருந்த தந்தையையும் பார்த்தபடியே அழுதுகொண்டிருந்தார்.

குழந்தையின் அழுகுரலை குளத்தினுள் மூழ்கி நீராடிய தந்தையால் உணர முடியவில்லை. ஆனால், குழந்தையின் அழுகுரலைக் கேட்ட சீர்காழி திருத்தல ஈசன் தோணியப்பர், பார்வதியிடம் குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார். அவ்வண்ணமே அன்னை உமையவளும் ஞானப்பாலை சம்பந்தருக்கு ஊட்டி, அவரது கண்ணீரைத் துடைத்து விட்டு, சிவபெருமானுடன் தரிசனம் கொடுத்து மறைந்தார்/

சிறிது நேரத்தில் குளித்து விட்டு வந்த சிவபாத இருதயர், சம்பந்தரின் வாயில் பால் எச்சிலைக் கண்டு ‘யார் தந்த எச்சில் பாலை உண்டாய்? சொல்' எனக் கேட்டு, சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார். அப்போது சம்பந்தர், சிவனும்- பார்வதியும் அம்மையப்பனாய் தரிசனம் தந்த திசையைக் காட்டி, ‘தோடுடைய செவியன் விடையேறி' என்று பதிகம் பாடலானார். ஆம்! அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி. மூன்று வயது குழந்தையின் பாடலைக் கேட்டு சொக்கி நின்றது கூட்டம்.

திருஞானசம்பந்தர் வாழ்ந்த வீடு, சீர்காழியில் திருஞானசம்பந்தர் தெருவில் அமைந்துள்ளது. தற்போது அந்த வீட்டில் தேவாரப் பாடசாலை நடைபெற்று வருகிறது. சீர்காழியில் மூன்று மூர்த்தங்களாக ஈசன் அருள்பாலித்து வருகிறார். பிரம்மதேவர் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர், கிழக்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார். இவர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். பிரம்மபுரீஸ்வரரின் வலதுபுறம் தனிச் சன்னிதியில் திருஞானசம்பந்தர் உற்சவராக எழுந்தருளியுள்ளார். பிரம்மபுரீஸ்வரரின் கருவறைக்கு மேல்தளத்தில் கட்டுமலையில் தோணியப்பரும், பெரிய நாயகி அம்மனும் குரு மூர்த்த வடிவில் அருள்புரிகிறார்கள். தோணியப்பர், பெரியநாயகி அம்பாளின் பின்புறம் பிரம்மதேவர், விஷ்ணு, சரஸ்வதி, லட்சுமி என அனைவரும் சிவபெருமானை வணங்கிய வண்ணம் திருக்கயிலைக் காட்சி பெறுகிறார்கள்.

திருக்கோவில் தேவஸ்தானம் ‘சட்டைநாதர் தேவஸ்தானம்’ என்றே அழைக்கப்படுகிறது. சீர்காழியில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் நிறைவில் ‘சட்டைநாதர் உலா' நள்ளிரவில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டால், நாம் மனதில் நினைத்தவை அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாத திருவாதிரை நன்னாளில் காலையில் தருமபுரம் ஆதீனம் குரு மகாசன்னிதானம், இளைய சன்னிதானம் முன்னிலையில், ஆயிரக்கணக்கான அடியவர்கள் சூழ ‘சம்பந்தருக்கு திருமுலைப்பால் ஊட்டிய ஐதீக விழா' நடைபெறுகிறது.

அன்று மாலையில் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் உள்ள சம்பந்தர் உற்சவமூர்த்தி, அருகில் உள்ள திருக்கோலக்கா சிவாலயம் சென்று நள்ளிரவில் திருக்கோலக்கா ஈசனிடம் பொற்றாளமும், அந்த பொற்றாளத்தின் ஓசையை அத்தல ஓசை நாயகி அம்மனிடமும் பெற்று மறுநாள் காலையில் மீண்டும் சீர்காழி சட்டைநாதர் ஆலயம் திரும்புவார்.

மகாவிஷ்ணுவின் தோலைச் சட்டையாகப் போர்த்திய சட்டைநாதர் திருமேனி சிறப்புடையது. தேவார முதலிகள் மட்டுமன்றி மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், கணநாதர், நம்பியாண்டார் நம்பிகள், பட்டினத்தார், சேக்கிழார், அருணாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, முத்து தாண்டவ தீட்சிதர் ஆகியோரும்கூட இத்தலத்தின் மீது பாடல்கள் பாடியுள்ளனர்