இயற்கை அழகும் இறைவனின் அருளும் நிறைந்த திருத்தலம் தலைமலை.
திருமலைக்கு இணையான தலைமலை! அற்புதமான புராண ஸ்தலம்!
மலைகள், நம் மரபில் வெறும் மலைகள் மட்டுமல்ல; இறை சாந்நித்தியம் நிறைந்த இயற்கைப் பொக்கிஷங்கள்! இறைவன் கோயில் கொள்ளும் இடம் என்பதாலும் இறைவனே மலையாகக் காட்சி கொடுக்கிறான் எனும் நம்பிக்கையாலும் மலைகளைத் தொழுவது நம் முன்னோர்களின் வழக்கம். அப்படிப்பட்ட அற்புதமே தலைமலை. கேட்டவருக்குக் கேட்ட வரம் தரும் திருவேங்கடவன் எழுந்தருளியிருக்கும் திருமலைக்கு இணையான ஓர் அற்புதத் திருத்தலம், இந்தத் தலைமலை என்கிறார்கள்!
பொதுவாகவே, மலையேறி இறைவனை தரிசிக்கும் அனுபவம் மகத்தானது. இயற்கை எழில்சூழ்ந்த மலைகளில் ஏறி, தூய காற்றை சுவாசித்தபடி உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி கொள்ளும் பயணத்தை மேற்கொண்டு இறைவனை வழிபடும் அனுபவம் தனித்துவமானது. அப்படி ஓர் ஈடு இணையற்ற பரவச அனுபவமாக அமைவது தலைமலை யாத்திரை.
தொலைவிலிருந்து பார்க்கும்போது, சயன கோலத்தில் அருள்பாலிக்கும் பெருமாள்போலவே காட்சியளிக்கிறது, தலைமலை. ஆக, மலையையே மாலவனாக பாவித்து, மலைக்குக் கற்பூரம்காட்டி மானசீகமாக அனுமதி பெற்று, நல்லவிதமாகப் பயணித்துத் திரும்ப வேண்டிக்கொண்டு மலையேற்றத்தைத் தொடங்குகிறார்கள் பக்தர்கள்.
பாதைகள் அற்ற வழியில் கல்லும் முள்ளும் கடந்து பயணிக்க, ஒரு கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் கருப்பசாமி கோயிலை அடையலாம்.`ஒரு கி.மீ தூரம்தானே' என்று தோன்றினாலும் அந்தத் தூரத்தைக் கடக்க ஒரு மணி நேரத்துக்கும் மேலாகும். மழைக்காலங்களில் கூடுதல் நேரமாகும். காரணம், பாறைகளில் வழிந்துகொண்டிருக்கும் நீர். அதன்காரணமாக அந்தப் பாறைகள் வழுக்கும். கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே மலையேறி, கருப்பசாமியை வழிபட்டுவிட்டு சிறு ஓய்வுக்குப் பின் மலையேறினால் `காத்தாடி மேடு' எனும் பகுதியை அடையலாம்.
பெயருக்கேற்றாற்போல் அந்தப் பகுதியில் வீசும் காற்று பக்தர்களின் களைப்பைப்போக்கும் விதத்தில் சுகம் தருகிறது. காற்றில் மூலிகைகளின் வாசம் வீசுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்கிறார்கள் பக்தர்கள். மூலிகைக் காற்று நம் மேனியைத் தீண்டும்போது புது உற்சாகம் பிறக்கிறது. அதன் பின்பு கூட்டுப்பாதை வழியாக ‘முழங்கால் முடிச்சு’ என்னும் இடத்துக்கு வந்து சேரலாம்.
திருமலையில் காணப்படும் `முழங்கால் முறிச்சான்' பகுதியைப் போலவே, இந்த `முழங்கால் முடிச்சும்' செங்குத்தான மலையேற்றமாய்த் திகழ்கிறது. கடினமான அந்த மலையேற்றத்தின் முடிவில் கன்னிமார் சுனையை அடையலாம். கன்னிமார் சுனை, திருப்பதி திருமலையின் சுவாமி புஷ்கரணிக்கு இணையான தீர்த்தமாகக் கருதப்படுகிறது. கோடையிலும் வற்றாமல் தீர்த்தம் நிறைந்து காணப்படுகிறது. அருகிலிருக்கும் மூலிகைகளின் சாறுகள் கலப்பதால், இந்தத் தீர்த்தமே அருமருந்தாக விளங்குகிறது.
இந்தத் தலம் குறித்த புராணச் சம்பவம் ஒன்று சொல்லப்படுகிறது. சனி பகவானின் அதிதேவதை யமன். யாராக இருந்தாலும் அவர்களைக் குறிப்பிட்ட காலம் பற்றிக்கொள்வது என்பது சனி பகவானின் கடமை. தனக்கு அதிதேவதையாயிருந்த போதும் குறிப்பிட்ட காலத்தில் யமனையும் பற்றிக் கொண்டார், சனி பகவான்.
உலக மக்களின் உயிர்களை எல்லாம் எடுக்கும் யமதருமரைச் சனி தோஷம் பீடித்ததால், அவர் தன் கடமைகளைச் செய்ய இயலாமல் தவித்தார். அப்போது, சனி தோஷம் நீக்கும் தலம் எது என்று அவர் தேவகுருவைக் கேட்டபோது, ‘தலைமலையில் இருக்கும் கன்னிமார் சுனையில் நீராடி, அங்கு சுயம்புவாய்த் தோன்றியிருக்கும் வேங்கடாசலபதியை வணங்கினால் அனைத்து தோஷங்களும் நீங்கும்’ என்று அறிவுறுத்தினார்.
யமனும் அதன்படியே செய்ய, அவரைப் பீடித்திருந்த சனி தோஷம் விலகியதாம். இத்தகைய மகிமை மிகுந்த சுனை நீரைத்தொட்டு வணங்கி, கொஞ்சம் நீரை எடுத்து தலையிலும் தெளித்துக் கொண்டு மலையேறினால், சிறிய திருவடியாம் ஆஞ்சநேய சுவாமியின் சந்நிதியை அடையலாம்.
வாயு புத்திரனின் சந்நிதியில் வழிபட்டுவிட்டு, மேலும் படிகள் ஏறினால் கிருஷ்ணனின் சந்நிதி. கிருஷ்ணன் இருக்குமிடத்தில் ஆழ்வார்கள் இல்லாமலா... ஆழ்வார்கள் பன்னிருவரும் இங்கு கோயில்கொண்டுள்ளனர். கிருஷ்ணனை வழிபட்டு இன்னும் மேலேறினால்... சஞ்ஜீவிராயப் பெருமாள், நல்லேந்திரப் பெருமாள், நல்லையன், வேங்கடாசலபதி, ஸ்ரீநிவாஸப் பெருமாள் என்றெல்லாம் போற்றப்படும் வேங்கடவனின் சந்நிதியை அடையலாம்.
இருள் சூழ்ந்திருக்கும் அந்தச் சந்நிதிக்குள் தீப ஒளியில் மிளிரும் பெருமாளின் திருமேனி தரிசனம் சிலிர்ப்பூட்டுகிறது. உள்ளே இரண்டு மூலவர்கள். ஒருவர் சுயம்புவாய் உதித்த மூர்த்தி. மற்றொருவர் பூதேவி ஸ்ரீதேவி சமேதராய்ப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட மூர்த்தி. மகாலட்சுமி தாயாருக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. அன்னையின் தரிசனம் அனைத்து மனக்கவலைகளையும் போக்கும் அருமருந்தாகத் திகழ்கிறது.
``இந்தத் தலத்தில் ஒருமுறை மலையேறி வந்து வேண்டிக்கொண்டாலே துன்பங்கள் எல்லாம் நம்மைவிட்டு நீங்கிவிடும். குழந்தை வரம் வேண்டுபவர்கள், கடன் பிரச்னைகளில் சிக்கித் தவிப்பவர்கள், பகைவர்களின் தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், விரைவில் தங்களின் துயர் நீங்கப் பெறுவர். நன்மைகள் நிறைந்த வாழ்வைப் பெறுவதோடு வாழ்க்கைக்குப்பின் பிறவிப் பிணியும் தீரும்” என்கின்றனர் பக்தர்கள்.
இந்த மலையின் அற்புதம் உணர்ந்த மக்கள், இங்கு பௌர்ணமி தினங்களில் மலையடிவாரப் பகுதியில் உள்ள பாதையில் கிரிவலம் வருகிறார்கள். தற்போது இந்தப் பாதை செம்மைப் படுத்தப்பட்டு வருகிறது.