24ம் தேதி தை அமாவாசையை மறந்துடாதீங்க. முன்னோர் ஆசி தரும் நாள்!

இந்துக்கள் ஒரு வருடத்தில் வரும் தமிழ் மாதங்களை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர்.


அவை தை முதல் ஆனி வரை உத்தராயனம். ஆடி முதல் மார்கழி வரையுள்ள தக்ஷிணாயனம். இந்த இரு அயனங்களின் ஆரம்பமான தை மற்றும் ஆடி மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் தை அமாவாசை, ஆடி அமாவாசை என்று முன்னோர் வழிபாட்டுக்குரிய விசேஷ நாட்களாகச் சொல்லப்பட்டுள்ளன.

அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் நேர்கோட்டில் வருவதால் அந்த சமயத்தில் ஏற்படும் காந்த அலைகள் மனதோடும் உடலோடும் தொடர்புடையதாக இருக்கும் இன்றைய தினம் மனதை அலைய விடாமல் இருப்பது நல்லது. உடல் நலத்திலும் அக்கறை செலுத்துவது அவசியம் என்கிறது இன்றைய விஞ்ஞானம். இதனை அன்றே அறிந்துதான் நமது முன்னோர்கள் இதனை வழிபடுவதற்கு உரிய நாளாகச் சொல்லி வைத்தார்கள்.

சூரியன் பிதுர்காரகன். சந்திரன் மாத்ரு காரகன். இவர்கள் சிவசக்தி ஸ்வரூபிகள் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. அன்று பிதுர்லோகத்திலிருந்து நமது முன்னோர்கள் தாங்கள் வாழ்ந்த பூலோகத்திற்கு சூட்சமமாக வந்து தமது வாரிசுகளாக விளங்கும் நம்மை அன்போடும், கரிசனத்தோடும் கவனிக்கிறார்கள். எனவே அன்று நீர் நிலைகளில் புனித நீராடி முன்னோர்க்கு வழக்கப்படி திதி கொடுத்து ஆறு சாத உருண்டைகளைப் பிண்டங்களாக ஆறு கடலில் கரைப்பது, அவர்களை நினைத்து படையலிட்டு காகத்திற்கு பிண்டமும், எளியோருக்கு எள் சாதம், அன்னதானம், ஆடை தானம் மற்றும் அவர்களுக்கு தேவைப்படும் பொருளைத் தானமாக அளிப்பது நல்ல பலன்களைத் தரும் என்கின்றன சாஸ்திரங்கள்.

பொதுவாக எண்ணங்கள் யாகங்கள் நடத்தும் போது அவற்றில் இடப்படும் ஆகுதிகளை அக்னி தேவனே நம்மிடம் இருந்து பெற்று அதனை உரிய தேவர்களுக்கு அளிப்பதாகச் சொல்வார்கள். பித்ரு பூஜையின் போது அந்த அக்னியின் சொரூபமாக சூரியபகவான் முன்னோரை எண்ணி நாம் தரும் எள் நீர் தர்ப்பணம் போன்றவற்றை பித்ரு லோகத்தில் வசிக்கும் நம் முன்னோரிடம் கொண்டு சேர்ப்பதாக ஐதீகம். அதனால் தான் பித்ரு காரகன் என்ற பெயர் சூரியனுக்கு வந்தது. எனவே அம்மாவாசை தினங்களில் சூரிய வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு.

வாழ்வில் நாம் அனுபவிக்கும் நன்மை-தீமை, சுகம் துக்கம், பாவம் புண்ணியம் போன்றவற்றிற்கு மூன்றுவித கர்மாக்களே காரணமாகின்றன. அவற்றின் விளைவுகள் எப்படி இருந்தாலும் அவற்றை நாம் அனுபவித்தே தீரவேண்டும். அவையாவன, சஞ்சித கர்மா: நாம் பிறக்கும் போதே நம் கருவழித் தொடர்பாகிய பெற்றோர், முன்னோர் செய்த செயல்கள். உதாரணம் – தாத்தா, பாட்டி செயல்கள் போன்றவை. பிராரப்த கர்மா – நாம் பிறவி எடுத்து உடலைப் பெற்றபின் பிறப்பு முதல் இறப்பு வரை செய்யும் பாப புண்ணியங்கள்.

ஆகாம்ய கர்மா - மேலே கூறிய கருமையப்பதிவான நம் முன்னோர்கள் செயல்களின் விளைவுகளும் நாம் புதிதாக தேடிக் கொண்ட பதிவுகளும் கூடுகின்ற வினைகள். அதையே அப்பன் பாவம் பிள்ளை தலையிலே என்பதும் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்றும் முன்னோரையும் நம்மையும் சேர்த்து கூறுபவையாக அமைபவை.

ஆடி, தை அமாவாசை விரதம் இருப்பது மூவகைப் பாவங்களையும் போக்கி முழுமையான நன்மை தரும். தை மாதத்தின் உயர்வினை அறிந்தே பிதாமகர் பீஷ்மர் தை மாதம் வரை அம்பு படுக்கையில் இருந்தார். ராமபிரான் முன்னோர் வழிபாட்டின் உயர்வினை சீதை லட்சுமணனுக்கும் கூட எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

அமாவாசையன்று பிறக்கும் குழந்தை அதீத திறமை வாய்ந்தவர்களாக திகழ்வார்கள். அன்று ஜீவசமாதிகளில் செய்யப்படும் வழிபாடு புதிய ஆற்றல்களையும் அதிக நன்மைகளையும் நமக்கு அளிக்கின்றன. எனவே மகான்கள், சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்குச் சென்று வழிபடுதல், அங்கு அமர்ந்து தியானம், மந்திர ஜபம் செய்தல், இஷ்டதெய்வ, குலதெய்வ நாமம் ஜபம் செய்து உருவேற்றுதல் போன்றவை பன் மடங்கு நன்மை தரும்.

சாதாரண அமாவாசை அன்று செய்யத் தவறி இருந்தாலும் ஆடி தை அமாவாசை தினங்களில் முன்னோர் வழிபாடு செய்வது பல மடங்கு நன்மை தரும். அதிலும் குறிப்பாக தை மாதம் தேவர்களின் பகல் பொழுது தொடங்கும் காலம். ஆதலால், தை அமாவாசை என்று முன்னோர் வழிபாட்டினைத் தவறாமல் செய்தால் தரணியில் செல்வமும் நிம்மதியும் தழைத்து வாழலாம்.