நல்ல கணவர் அமைய வேண்டுமா? இளம் பெண்களுக்கு வரம் தரும் பாவை நோன்பு!

பாவை நோன்பு என்பது உண்மையில் கன்னிப் பெண்களுக்கானது. தனக்கு ஏற்றார்போல் வாழ்க்கைத் துணையை அடையவும், தனது மனதிற்கேற்றார் போல் ஒரு வாழ்க்கை அமையவும், கண்ணனை வேண்டி கன்னிப் பெண்கள் மேற்கொள்வதுதான் இந்தப் பாவை நோன்பு.


திருமாலை தனது கணவனாக மனதில் எண்ணிக்கொண்டு, அவரையே நினைத்து உருகியவர் ஆண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் கோவிலில் குடிகொண்டிருக்கும் பெருமாளுக்காக தொடுத்த மலர் மாலைகளை எல்லாம், தானும் அணிந்து அழகு பார்த்து, சூடிக்கொடுத்த சுடர்கொடியாக மாறியவர்.

உலகை ஆளும் கண்ணனே தனக்கு கணவனாக வரவேண்டும் என்பதற்காக, அவர் மேற்கொண்ட நோன்பே பாவைநோன்பு. இந்த நோன்பை கடைப்பிடிப்பதற்காக அதிகாலையில் துயில் கலைந்து எழுந்த ஆண்டாள், தனது தோழியரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு நீராடச் சென்றாள். தன்னை கோபிகையாகவும், ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும், பெருமாள் அமர்ந்த கோவிலை கண்ணனின் வீடாகவும் எண்ணிக்கொண்டு தினமும் அங்கு சென்று வழிபட்டு வருவதை வழக்கமாக கொண்டவர்.கண்ணனை அன்றி, மற்ற மானிடரை கணவனாக ஏற்க மாட்டேன் என்று சபதம் மேற்கொண்ட ஆண்டாள், கிருஷ்ணன் அவதாரத்தின் போது கிருஷ்ணரை அடைய கோபியர்கள் மேற்கொண்ட பாவை நோன்பை, மார்கழி மாதத்தில் தானும் மேற்கொண்டார்.

‘திரு’ என்றால் மரியாதைக்குரிய என்னும் பொருள்படும். பாவை என்றால் பெண். மரியாதைக்கும், வணக்கத்துக்கும் உரிய பெண் தெய்வமான ஆண்டாள் பாடிய பாமாலை என்பதால் அது ‘திருப்பாவை’ என்றும் பாவை நோன்பை குறித்த பாடல் என்பதாலும் திருப்பாவை என்று பெயர் பெற்றது.

திருப்பாவையின் முதல் பாடலானது, திருப்பாவையின் தொகுப்பு பாடப்பட்டதற்கான நோக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் சுருக்கமாக அமைந்துள்ளது. அதைத் தொடர்ந்து வரும் 2 முதல் 5 வரையான பாடல்கள், திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீமன் நாராயணரை பற்றிய சிறப்பை எடுத்துக் கூறுகிறது.

ஆறு முதல் பதினைந்து வரையான துதிப்பாடல்கள், ஆழ்வார்களுக்கு ஒப்பாக தோழியர்களை கற்பனை செய்து கொண்டு அவர்களை எழுப்பி, நீராடிவிட்டு கோவிலுக்கு செல்வதை சொல்கிறது. இறுதியாக வரும் பதினைந்து பாடல்களும், உன்னையே கணவனாக எண்ணிக் கொண்டுள்ள என்னை ஏற்றுக்கொள்ளும்படி, வெண்ணெய் உண்டவனை நினைத்து உருகி பாடியிருப்பதை பார்த்தால் ஆண்டாளின் மனநிலை அனைவருக்கும் புரியும்.

வைணவ சமய வழிபாட்டில் ஒன்றறக் கலந்து விட்ட ஒன்று திருப்பாவையாகும். மாதவனாகிய எம்பெருமானுக்கு உகந்த மார்கழி மாதக் காலைகளில் அனைத்து வைணவக் கோயில்களிலும் இசைக்கப்படுவதே இதன் பெரும் சிறப்பு.

தமிழில் புனையப்பெற்ற பாடல்களே ஆயினும், தமிழறியா அடியார்கள் கொண்ட வைணவத் தலங்களிலும், மார்கழி மாதக் காலைகளில் திருப்பாவை இசைக்கப்படுவதும், இந்தியாவில் எங்கெல்லாம் பெருமாளின் திருக்கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம், கோதை தனக்கும் ஒரு தனிச் சந்நதி கொண்டுள்ளதும் வேறு எந்த ஒரு அடியவருக்கும் காணப்பெறாத தனிச் சிறப்பாகும்.