மூலாதார சக்கரத்தை விளக்கும் கமலாம்பிகை அருள்புரியும் திருவாரூர் – ஸ்ரீ சக்கரத்திலுள்ள அத்தனை மூர்த்திகளும் குடிகொண்டுள்ள கோயில்

அரிது அரிது மானிடராதல் அரிது என்பது ஔவையின் திருவாக்கு. மானிடப் பிறவிதான் இறைவனோடு ஆத்மாவை ஐக்கியப்படுத்த உதவும் அரிய பிறவியாகும்.


மனித உடலில் சூட்சம வடிவில் ஆறு ஆதாரச் சக்ரங்கள் உள்ளன. அவை;

1. மூலாதாரம்

2. சுவாதிஷ்டானம்

3. மணிபூரகம்

4. அநாகதம்

5. விசுக்தி

6. ஆஜ்ஜை

ஆஜ்ஞா சக்ரத்திற்கு மேல் தலை உச்சியில் ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப்பூ வடிவில் சஹஸ்ராரம் அமைந்துள்ளது. இது பிரபஞ்ச வெளியோடு தொடர்புடையது. பிரமந்திரம் வழியாக ஸஹஸ்ராரத்தை அடையலாம். இதை அடையும் போது பேரானந்த நிலை கிட்டும். ஸ்ரீசக்ர வடிவம் இவையனைத்தையும் உள்ளடக்கியது.

இந்த ஆறு ஆதார சக்ரங்களுக்கும் அம்பிகைக்கு திருத்தலங்கள் உண்டு. அம்பிகையின் ஆட்சி பீடங்களாக இந்தத் தலங்கள் விளங்குகின்றன. இந்த ஒவ்வொரு திருத்தலமும் அம்பிகையின் மகத்துவத்தை, அம்பிகையின் வைபவத்தை, அம்பிகையின் தத்துவத்தை உணர்த்தக்கூடிய தலங்களாக இருக்கின்றன. இதில் மூலாதரத்தை குறிக்கும் தலமாக விளங்குவது தஞ்சாவூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் மார்க்கத்தில் அமைந்துள்ள திருவாரூர்.

மூலாதார சக்கரம் நான்கு இதழ்கள் கொண்ட சிவப்பு நிறத் தாமரை ஆகும். இது கருப்பு நிற லிங்கத்தை மூன்று சுற்றுகள் சுற்றப்பட்ட பொன்னிற குண்டலினி சர்ப்பத்தை மையத்தில் கொண்டது. இச்சக்கரத்திலிருந்து நான்கு முக்கிய நாடிகள் வெளிக் கிளம்புகின்றன. அவை தாமரையின் நான்கு இதழ்கள் போல் தோற்றமளிக்கும். மூலாதாரச் சக்கரம் ஆனது பிறப்புறுப்புக்கும் ஆசன வாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ளது. இது இடை பிங்கலை சுழுமுனை என்கிற மூன்று நாடிகள் சேரும் இடத்தில் உள்ளது. இந்த சக்கரம் மலர்வதால் நமது ஆன்ம விழிப்பு ஏற்படுகிறது. மனம் ஏதோ ஒரு வகையில் ஆன்ம ஈடுபாடு கொள்ளத் தொடங்கும். குண்டலினி விழிக்கும் ஒருவனுக்கு தத்துவ ஞானத்தை உண்டு பண்ணும். அறிவில் சிறந்தவன் ஆகிறான்.

வல்மீகபுரம் என்றால் திருவாரூரைக் குறிக்கிறது. வல்மீகம் என்றால் புற்று என்று பொருள். இங்குள்ள ஈசனுக்கு வன்மீக நாதர் என்று பெயர். பிறக்க முக்தி திருவாரூரில் என்று புகழப்படுவது மூலாதார ஸ்தலமான திருவாரூர். பஞ்சபூத தலங்களில் பிருத்வி தலம் என்று புகழப்படுகிறது. திருவாரூர் கோவில் தோன்றிய காலத்தை யாராலும் கூற முடியாது என்கிறார் திருநாவுக்கரசர். சப்தவிடங்கத் தலங்களில் முதன்மையான திருத்தலம். நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்து காட்சி தரக் கூடிய திருத்தலம். லலிதா சகஸ்ரநாமத்தின் மொத்த வடிவாக அம்பிகை விளங்கி நிற்கும் ஸ்ரீவித்யா திருத்தலம்.

இத்திருத்தலம் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய கோவில்களில் ஒன்று என்று சொல்லும்படியாக பரந்துவிரிந்த க்ஷேத்திரம். திருவாரூர் கோவிலுக்குச் சென்று விட்டால் குவித்த கரங்களை விரிப்பதற்கு வழியே இல்லை என்றும் கூறும் அளவுக்கு அனேகமான சந்நிதிகளை உடைய திருத்தலம். உண்மையில் இதுவே அம்பிகையின் கோட்டை. அம்பிகையின் ஸ்ரீசக்கரத்தில் உள்ள அத்தனை மூர்த்திகளும் குடியிருக்கும் கோவில்.

ஸ்ரீமன் நாராயணன் பூஜித்த சிவசக்தி விக்ரகத்தை முசுகுந்த சக்கரவர்த்திக்கு கொடுக்க அவர் அதனை இங்கே பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். மூர்த்தி தியாக ராஜனாக இருந்தாலும் அம்பிகையே இங்கு பிரதானம். இந்தத் தலத்தின் விசேஷம் என்னவென்றால் பிரதான மூர்த்தியான தியாகராஜ சுவாமியைப் பார்த்தால் ஸ்ரீவித்யா ஸ்வரூபம் என்பது மறைபொருளாக நமக்கு உணர்த்தப்படுவதைக் காணலாம். ஏனெனில் அங்கே எப்போதும் தியாகராஜரின் மூகம் மட்டுமே வெளியே தெரியும்படி அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். முன்புறம் பார்த்தால் சிவசக்தி ரூபிணியாக சிவனும் சக்தியும் ஆக அமர்ந்து இருக்கக்கூடிய தம்பதி கோலத்தை நாம் பார்க்கமுடியும். அதுவே பின்புறம் தரிசனம் செய்தால் சிவ சக்த்யைக்ய ரூபினி லலிதாம்பிகா என்று கூறும் விதமாக ஒரு பெண் தனியே அமர்ந்து இருக்கக்கூடிய வடிவத்திலே அலங்காரத்தை பார்க்க முடியும்.

இது போன்ற பல மறைபொருளான ரகசியங்களை உள்ளடக்கிய திருத்தலம். அதேபோல அம்பாள் தனிக்கோவில் கொண்டு கமலாம்பிகையாகக் கொலுவிருக்கிறாள். அம்பிகையின் கோவிலின் மேற்கு மூலையில் அக்ஷர பீடம் அமைந்துள்ளது. இந்த அக்ஷர பீடத்தில் 51 அக்ஷரங்கள் எழுதப்பட்ட திருவாச்சி மட்டுமே இருக்கும். அத்தனை மந்திரங்களுக்கும் சித்தி அளிக்கக்கூடிய தன்மை கொண்டதாக விளங்கக்கூடிய அக்ஷர பீடம் இது.