பக்குவமில்லாத அரசியல்வாதிகள்... தே.மு.தி.க.வை வெளுத்துக்கட்டிய எடப்பாடி பழனிசாமி

கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. வெளியேறியதால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். மேலும் புதிய தமிழகம் கட்சி ஏற்கனவே கூட்டணியில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.


 செய்தியாளர்களிடம் பல்வேறு விஷயங்களைப் பேசினார் எடப்பாடி பழனிசாமி. ‘‘ஒரு கூட்டணியில் இடம் பெறுவதும், வெளியேறுவதும் பொதுவாக நடக்கும் விஷயம்தான். ஆனால், வெளியேறும்போது தேவையில்லாத விஷயங்களைப் பேசக்கூடாது. தே.மு.தி.க.வுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டது. அவர்கள் பக்குவமில்லாத அரசியல்வாதிகள் என்று கூறினார்.

 வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பது குறித்து கேட்டபோது, ‘இது எல்லா கட்சியிலும் இருக்கும் பிரச்னைதான். எல்லாமே சரியாகிவிடும்’ என்று தெரிவித்தார்.

 மேலும் அவர் பேசுகையில், கருத்துக்கணிப்புகள் என்பது சரியாக இருப்பதில்லை, எல்லா கருத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கிவிட்டு, அ.தி.மு.க. பெரிய வெற்றி பெறும். புதுவையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும், தேர்தல் அறிக்கையில் மக்கள் விரும்பும் எல்லாமே இருக்கும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.