தினகரனை நம்பினால் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும்... 18 எம்.எல்.ஏ.க்களை சுட்டிக்காட்டி எடப்பாடி பேச்சு

தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் தனித்தன்மையுடன் அட்டகாசமாக பேசி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


சமீபத்தில் வேலூரில் தமிழக முதல்வர் எடப்பாடி பேசியபோது, “அதிமுகவைப் பின்னடையச் செய்வதற்கு சிலர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். டிடிவி தினகரன் அதில் ஒருவர். பத்தாண்டுக் காலம் கட்சியிலேயே கிடையாது. அம்மா அடிப்படை உறுப்பினர்லேருந்து நீக்கி வெச்சிருந்தாங்க. அம்மா மறைவுக்குப் பிறகு அவர் கட்சியில சேர்ந்துக்கிட்டதா அவரே அறிவிச்சுக்கிட்டாரு. அவர் அதிமுகவைக் கைப்பற்றுவதற்கு எவ்வளவு முயற்சி செய்தார் தெரியுங்களா?

எங்க கட்சி எம்.எல்.ஏ.க்கள் 18 பேரைப் பிடிச்சிக்கிட்டுப் போயிட்டாரு. அந்த 18 பேரையும் நடுரோட்ல விட்டுட்டுப் போயிட்டாரு. அவரை நம்பிப் போனவங்கள்லாம் நடுரோட்லதான் நிக்கோணும். இப்படி ஏதாவது செஞ்சி அதிமுகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி திமுகவுக்கு உதவுறதுக்காக சில பேரு சதித்திட்டம் தீட்டிக்கிட்டிருக்காங்க. அதையும் எங்க அரசு, எங்க கட்சி முறியடிக்கும்.

திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்று எம்ஜிஆர் தன் இறுதி மூச்சு வரை போராடினார். அதே வழியில் ஜெயலலிதாவும் நின்றார். சில சதிகாரிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு சதி வலையை இன்றைக்குப் பின்னிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வலையை சின்னாபின்னமாக தூள் தூளாக தகர்த்தெறிந்து, அம்மா அரசு தொடர நாம் பாடுபடுவோம். அதிமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. ஏனென்றால், அந்த இரு பெரும் தலைவர்கள் தனக்காக வாழவில்லை. நாட்டு மக்களுக்காக வாழ்ந்தவர்கள்" என்று பேசினார் எடப்பாடி பழனிசாமி.

இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரும் இதே கருத்தை மீண்டும் பேசினார். ஒன்றிணைவோம் வா என்று இப்போது டிடிவி.தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். அது, அ.தி.மு.க.வுக்கான அழைப்பு அல்ல, தி.மு.க.வுக்கானது. அந்த கட்சியும் தி.மு.க.வும் இணைந்து அ.தி.மு.க.வை தோற்கடிக்க நினைக்கின்றன. ஆனால், அது நடக்கப் போவதில்லை’’ என்று தெரிவித்து இருக்கிறார்.

ஒரு நாள் கூத்து கதைக்கு ஆகாது என்பதைத்தான் சசிகலாவின் வருகை தமிழகத்திற்கு எடுத்துக் காட்டியுள்ளது.