மரண பயம் வாட்டுகிறதா? இந்த அம்மனை வணங்கினால் நிம்மதி கிடைக்கும், பயம் போயேபோய்விடும்!

நரசிம்ம மூர்த்தியின் சக்தி லட்சுமியாகவும் பரமனின் சக்தி பார்வதியாகவும் திருமாலின் வராக சக்தி வாராஹியாகவும் அருள்வதைப் போல கோபாலனின் மாயாசக்தி கோபால பைரவி என்று போற்றப்படுகிறாள்.


மனிதர்களின் நல்வாழ்விற்கு உதவும் ப்ராண ஓட்டத்தை புல்லாங்குழலின் இனிய நாதமாக அவர்தம் வினைகளுக்கு ஏற்ப கண்ணன் குழல் மூலம் ஊத அவரது பிராண சக்தியும் மாயாசத்தியுமான பைரவி தானும் உயர் இயக்கப் பணியை கண்ணோடு இணைந்து செய்கிறாள். கண்ணனின் இடது கையில் உள்ள தாமரை பக்தர்களுக்கு ஞானத்தையும், செல்வத்தையும் தரவல்லது.

குருவாயூரப்பனாகத் தோன்றும் கிருஷ்ணனும் தன் கரத்தில் தாமரையை ஏந்தி தன் திருவடித் தாமரையை சரணடையும்படி கூறுகிறார். முதலில் விவேகமும் வைராக்கியமும் மிக அவசியம். எது நிலையானது எது நிலையற்றது என்றறியும் விவேகத்தை அருளும் வகையில் கோபால பைரவி இடது திருக்கரத்தில் வாளை ஏந்தி உள்ளாள்.

நிலையானதையும், நிலையற்றதையும் பகுத்துக்காட்டுவதாக அந்த வாள் திகழ்கிறது. நிலையானதான பரமாத்மாவை உணர்ந்து நிலையற்ற பற்றுதலை விட வேண்டும் என்பதை அந்த வாள் உணர்த்துகிறது. மானிட உடலுக்கே மரணம். கோபால பைரவி அந்த மரணத்தை வெல்லும் வழியைச் சொல்கிறாள்.

மரணத்தை வெல்வது அது பற்றிய பயம் கொள்ளாதிருப்பதன் மூலமாகத்தான். விவேக வைராக்கியத்தால் ஞானம் அடையப் பெறுவோமானால் மரண பயமே ஏற்படாது. அதாவது மரணம் என்பது வாழ்வின் ஒரு சம்பவம்தான் என்ற உண்மையை உணர்ந்து விடுவோம். இதைக் குறிக்க மண்டை ஓட்டின் மீது தனது பாதத்தை வைத்து அனுக்கிரகம் செய்கிறாள் அன்னை. பைரவம் என்றால் அச்சமூட்டுதல் எனப் பொருள். ஆனால் கோபால பைரவி அன்பின் வடிவானவள்.

இவள் அணிந்துள்ள செந்நிற மாலை அன்பர்களுக்கு அனைத்து சௌபாக்கியங்களையும் அருளக் கூடியது. மாலையிடையே காணப்படும் வெண்மலர்கள் சகல ஞானத்தையும் உணர்த்துகின்றன. நம் மூலாதாரத்தில் இவளைத் தியானிப்பது மிகச் சிறந்த பலன் தரும். அனைத்தையும் தாங்கும் இவள் அருளால் ஆரம்பம் தெய்வீக சக்தியோடு இருப்பின் முடியும் தெய்வீக சிறப்புடன் நிறைவடையும்.

இந்த கோபாலனும் பைரவியும் இணைந்த திருக்கோலத்தை வணங்கினால் பயத்தை வெல்லலாம். கோரும் வரங்களும் அடையப்பெறுவார்கள். பூரண அலங்காரங்களோடு பீதாம்பரம் தரித்து நவரத்தினங்களால் ஆன அணிகலன்கள் அணிந்து கருணை மழை பொழியும் கண்களோடும், ரத்னகிரீடமும், மயில் பீலியும் தரித்து மரணபயம் அகற்றும் கோபால பைரவி, வணங்குவோர் தீவினைகளை விரட்டி ஆத்மஞானமும் பிற எல்லா நலன்களும் தருபவள்.