மகாவிஷ்ணுவின் பரிபூர்ண அருளைப் பெற பௌர்ணமி தோறும் மாலையில் இந்தப் பூஜையை செய்யுங்கள்!

ஸ்ரீமத் நாராயணன் எடுத்துரைத்த சத்யநாராயண பூஜை மிகவும் வலிமையானது.


அதே சமயம் பகவானின் அருளை பூரணமாக பெற்றுத்தரும் மகத்துவம் மிக்கது. புரோகிதரை வைத்துத்தான் இந்த பூஜையை செய்ய வேண்டும் என்று இல்லை. நாமே செய்யலாம் என்பதே இந்த பூஜையின் தனிசிறப்பு.

ஸ்ரீ சத்ய நாராயண பூஜைக்கு உகந்த தினம் பௌர்ணமி. அன்றைய தினம் மாலை பூஜை செய்வது சிறப்பு. பூஜைக்கு முதல் நாள் விரதம் இருக்க வேண்டும். வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். உறவினர் நண்பர்களை வெற்றிலை, பாக்கு, குங்குமம் கொடுத்து பூஜைக்கு அழைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் தலைக்கு குளித்து, வீடு முழுவதும் அலங்காரம் செய்ய வேண்டும். வீட்டு வாசலில் கோலம் போட்டு, வாயிலில் மாவிலைத் தோரணம் கட்ட வேண்டும்.

பூஜையறையை மாட்டு சாணத்தால் மெழுகி கோலமிட்டு மணைப்பலகையை கிழக்கு மேற்காக வைக்க வேண்டும். ஒரு தூய்மையான வெள்ளைத்துணியை விரித்து அதில் அரிசியை கொட்டவேண்டும். அதன் நடுவே ஒரு சொம்பை (செம்பு பித்தளை, வெள்ளி என அவரவர் வசதிக்கு ஏற்ப) வைத்து அதற்குள் வெற்றிலை பாக்கு ஒரு ரூபாய் நாணயம் போட்டு சுத்தமான நீர் விட்டு மேற்புறத்தில் ஒரு தேங்காயை வைக்க வேண்டும்.

இதுதான் பூஜைக்கான கலசம். கலசத்திற்கு சந்தனம் குங்குமம் இடவேண்டும். ஸ்ரீசத்ய நாராயண சுவாமியின் மூர்த்தம் இருந்தால் அதற்கு முன்பாக விளக்கேற்றி வைக்க வேண்டும். பிறகு அனைவரும் கிழக்கு பார்த்து அமர்ந்து பூஜையைத் தொடங்க வேண்டும்.

விநாயகர் பிரார்த்தனையுடன் துவங்குகிற பூஜை, நவக்கிரகங்களை போற்றியும், பிறகு முப்பெரும் தெய்வங்களை துதித்தும், பிறகு ஸ்ரீசத்ய நாராயணரை துதித்தும் நடைபெறும். பூஜைக்கு தாமரை மலர்களையும் துளசியையும் தாராளமாக பயன்படுத்த வேண்டும். சத்ய நாராயண பூஜையின் முக்கிய அம்சம் பூஜையைப் பற்றிய ஐந்து கதைகள் தான்.

பூஜையின் மகிமை, செய்ய வேண்டிய நெய்வேத்தியம், பகவான் பிரசாதத்தை உண்ண மறந்தால் ஏற்படக் கூடிய கெடுதல், பூஜை செய்வதாக வேண்டிக் கொண்டு மறந்து போனால் நடைபெறக்கூடிய கெடுதல், ஸ்ரீ சத்ய நாராயணனின் கருணை ஆகியவை இந்தக் கதைகளின் மூலமாக எடுத்துரைக்கப்படும்.

கோதுமை ரவையில் வெல்லம், பசும்பால், நெய், முந்திரி, ஏலம் சேர்த்து தயாரித்த கேசரியை ஸ்ரீசத்ய நாராயண சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்து அனைவருக்கும் பிரசாதமாக தருவதுடன் பூஜை நிறைவடைகிறது. அவரவர் வசதிக்கு ஏற்ப பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு தாம்பூலம் வழங்க வேண்டும்.