சனி என்றாலே எல்லோருக்கும் பயம் வருகிறதே ஏன்?
சனி என்றாலே அச்சம் எதற்கு? சனி பகவானால் எந்தெந்த ராசிகளுக்கு நன்மை உண்டாகும் தெரியுமா?

அசுப கிரஹங்களில் முதன்மையானது சனி என்பதால் இந்த பயம் வருகிறது. சனி என்றாலே தீய கோள், தீய பலனை மட்டுமே தரும் என்பது போன்ற கருத்து நிலவுகிறது. சோதனைகளை தந்து நமது முன்னேற்றத்திற்கு சனி தடையாக இருப்பார் என்று எண்ணுவதால் சனி என்ற வார்த்தையை உச்சரிப்பதற்கு, ஏன் காதால் கேட்பதற்குக் கூட அச்சம் கொள்கிறோம்.
உண்மையைச் சொன்னால் சனியின் மீதான இந்த பயம் அர்த்தமற்றது. சனியின் தாக்கம் அதிகரிக்கும்போது நிதானித்து செயல்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டால் சனியைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. சில ராசிகளுக்கு சனியால் நன்மையே உண்டாகும். அந்த வகையில் எந்த ராசிக்கு என்ன பலன் என்று பார்ப்போம்:
மேஷ ராசி : மேஷ ராசியில் சனிபகவான் இருந்தால் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாவார். வீண் சண்டைகள் ஏராளமாக ஏற்படும். வாழ்க்கையில் சரிவும் துன்பமும் அடுத்தடுத்து உண்டாகும். எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும்.
ரிஷப ராசி : ரிஷப ராசியில் சனி பகவான் இருந்தால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டு.
மிதுன ராசி : மிதுன ராசியில் சனிபகவான் இருந்தால் புத்திர பாக்கியம் குறையும். வாழ்க்கையில் துயரமான சம்பவங்கள் உண்டாகும். போட்டி பந்தயங்களால் இழப்பு உண்டாகும். பொது வாழ்க்கையில் தோல்வியும் தொந்தரவும் உண்டாகும்.
கடக ராசி : கடகத்தில் சனி இருந்தால் பொருளாதார தடை உண்டாகும். புத்திர பாக்கியம் மிகுந்து காணப்படும். தாயாரின் தயவில் வாழ்க்கை ஓடும். எடுத்த காரியங்களில் அதிகம் தோல்வி உண்டாகும். செய்யாத குற்றங்களுக்கு தண்டனை அனுபவிப்பர்.
சிம்ம ராசி : சிம்மத்தில் சனி இருந்தால் எழுத்து துறையில் மேன்மை உண்டாகும். பிள்ளைகளால் சங்கடமும், தொந்தரவும் உண்டாகும். வாழ்க்கை தொல்லைகள் நிறைந்ததாக இருக்கும்.
கன்னி ராசி : கன்னி ராசியில் சனி இருந்தால் வறுமையான வாழ்க்கை, எளிதில் கோபப்படும் தன்மை, உடலில் பிணி ஏற்படுதல் போன்ற பலன்களை தரும். பல விஷயங்களுக்கு மற்றவர்களை சார்ந்தே செயல்படுவர். வீண் விவாதங்கள் ஏற்படும்.
துலாம் ராசி : துலாம் ராசியில் சனி இருந்தால் மிகுந்த செல்வ செழிப்பு ஏற்படும். பெண்களால் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் வெற்றியும், சிறப்பும் ஏற்படும். சனிபகவான் சுக்கிரனுடன் சேர்ந்தால் மிகவும் ராஜயோக பலன்கள் உண்டாகும்.
விருச்சக ராசி : விருச்சகத்தில் சனி இருந்தால் விஷத்தால் துன்பம் ஏற்படும். மிகவும் கண்டிப்பானவராக விளங்குவர். மனதில் சில சஞ்சலங்களும், குழப்பமும் உண்டாகும். எதிலும் நிலையற்ற தன்மையுடன் காணப்படுவர்.
தனுசு ராசி : தனுசு ராசியில் சனிபகவான் இருந்தால் மிகவும் திறமைசாலியாக இருப்பர். எதிலும், போராட்ட குணம் பிரகாசிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகர ராசி : மகர ராசியில் சனிபகவான் இருந்தால் கடினமான உழைப்பால் உயர்வர். பழிவாங்கும் குணம் இருக்கும். உயர்வான வாழ்க்கை வசதியுடன் சிறப்படைவர்.
கும்ப ராசி : கும்ப ராசியில் சனிபகவான் இருந்தால் தைரியம், துணிவு காணப்படும். சொத்து சேர்க்கை உண்டாகும்.
மீன ராசி : மீன ராசியில் சனிபகவான் இருந்தால் செல்வ சேர்க்கை ஏற்படும். பெருமைமிக்க வாழ்க்கை புகழ் மற்றும் செல்வாக்குடன் விளங்குவர். அரசியல் அந்தஸ்து கிடைக்கும். சுபகாரியங்களில் அதிக தடைகள் ஏற்படும்.
பரிகாரம் : ஏழரைச் சனி, அஷ்டம சனி உள்ளவர்கள் சனிதிசை நடைபெறுபவர்கள் திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபாடு செய்வது உத்தமம். சனிக்கிழமை விரதம் இருப்பது நன்மை அளிக்கும்.