தமிழகத்தில் பாஸ் ஆகும் மாணவர்களின் கல்வித் தரம் தாறுமாறாக இருக்கும் நேரத்தில், அரியர் மாணவர்கள் எல்லோரையும் பாஸ் செய்ய வைத்தால் நிலவரம் கலவரமாகிவிடுமே என்று ஆதங்கப்படுகிறார் பேராசிரியர் பிரபாகரன். இதோ, அவரது பதிவு.
அரியர் மாணவர்கள் எல்லாமே பாஸ் என்றால், கல்வித் தரம் என்னவாகும்..?
சென்றவாரம் வந்த இந்த விளம்பரத்தை அதன் தீவிரம் புரியாமல் வேடிக்கையாக எடுத்துக்கொண்டேன். பேராசிரியர் முரளியத்தவிர யாரும் அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. இப்போது கல்லூரிகளில் மாமாங்கத்திற்கு முன் படித்த/படிக்கமுயன்ற, டஜன் கணக்கில் பாக்கி வைத்துள்ள மாணவச் செல்வங்கள் கல்லூரிகளில் 10- 20ஆயிரங்களோடு வரிசை கட்டி நிற்கத்தொடங்கியுள்ளனர்.
நேற்றைக்கு தொலை நிலைக் கல்விக்கும் இந்தவிதி பொருந்தும் என்ற அறிவிப்பு வந்துள்ளது. பணம் கட்டாதவர்களையும் தேர்ச்சியடையச் செய்யலாம் என்ற ஆலோசனையை இன்னொரு அரசியல் தலைவர் வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது. இந்த விளம்பரத்தை ‘தமிழ்நாடு மாணவர்கள் முன்னேற்ற அமைப்பு’ என்ற அமைப்பு கொடுத்திருக்கிறது.
அப்படி ஒரு அமைப்பு எங்குள்ளது? அவர்களுக்கு தினசரிகளில் முழுப்பக்க விளம்பரம் கொடுக்கும் அளவிற்கான நிதி எங்கிருந்து வந்தது? நம் அரசியல்வாதிகள் வாக்கு வங்கிக்காக இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறார்கள்? ஏற்கனவே இந்திய அளவில் உயர்கல்விக்குச் செல்கிறவர்கள் 25% ஆக இருக்க, தமிழகம் 40% த்தை எட்டிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக் கல்வியில் தேர்ச்சி விகிதத்தை படிப்படியாக உயர்த்துவதற்காக ‘சிலபல’ சலுகைகள் செய்யப்பட்டு வருகின்றன. கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களுக்கும் NAAC இல் தரவரிசையைப் பேணுவதற்காக தங்கள் தேர்வு முறைகளை பலவீனமாக்கி தேர்ச்சி பெறும் மாணவர் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றனர்.
அதனால உயர்கல்வி கற்றவர்கள் சதவிகிதத்தில் தமிழகம் முதலிடம் என்பது ஒரு செயற்கையான சாதனை என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இந்திய அளவில் உயர்கல்வி பெறுகிறவர்கள் 40% மாக இருக்க, தமிழக மாணவர்கள் எண்ணிக்கை மத்திய பல்கலைக் கழகங்களில் மிகக் குறைவாக இருப்பதை இணைத்துப்பார்க்கவேண்டும்.
கேரள மாணவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப்பார்க்கும்போது இது இன்னும் வெளிப்படையாகத் தெரியும். இப்போது நோய்தொற்றை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு முன் தேர்ச்சியடையாதவர்களை தேர்ச்சியடையச் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? இது தமிழகத்தின் உயர்கல்வி ஏற்கனவே இறங்குமுகத்தில் இருக்கிறது என்பதை யாரிடம் சொல்வது?