ஆறாவது மாடியிலிருந்து விழுந்த ஐடி பொறியாளர்! - தவறி விழுந்தாரா? தற்கொலையா?

சென்னையை அடுத்த சிறுசேரி பகுதியில் உள்ள முன்னணி தகவல்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் வளாகத்தில் பணியாற்றிவந்த இளைஞர் ஒருவர், ஆறாவது மாடியிலிருந்து விழுந்ததில் உயிரிழந்தார். அவருடைய இறப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.


சிறுசேரியில் உள்ள டாட்டா கன்சல்ட்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றிவந்தவர், 25 வயதான பிரபு. இவர், திருப்பூர் மாவட்டம் நாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர். இதே நிறுவனத்தில் சில ஆண்டுகளாகப் பணியாற்றிவந்துள்ளார். அலுவலகக் கட்டடத்தின் நான்காவது மாடியிலிருந்து தொலைபேசி அழைப்புக்காக வெளியே வந்தவர், சிறிது நேரம் கடந்தும் மீண்டும் அலுவலகத்துக்குள் வரவில்லை.

திடீரென பெரும் அலறல் கேட்டதை அடுத்து, பாதுகாவல் பணியாளர்கள் அந்த இடத்துக்குச் சென்று பார்த்தனர். அங்கு இரத்தவெள்ளத்தில் கிடந்த பிரபுவை அவர்கள் சடலமாகவே காணமுடிந்தது. விசாரணையில், ஆறாவது மாடியிலிருந்து பிரபு கீழே விழுந்தது தெரியவந்தது. அண்மையில் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு புதன் காலையில்தான் சென்னைக்குத் திரும்பியுள்ளார்.

அலுவலகம் வந்தவர், அனைத்து சகாக்களையும் அதிர்ச்சித் துயரில் ஆழ்த்தும்படியாக மரணமடைந்தார். இது தவறி விழுந்ததால் ஏற்பட்டதா அல்லது தற்கொலையா என போலீசு விசாரணையில் தெரியவரும். இந்நிலையில் இது ஒரு மாதத்தில் இரண்டாவது ஐடி ஊழியரின் மரணம் என ஐடி ஊழியர் அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.