வேலைக்கு சேர்ந்த முதல் நாள்! கம்பனியின் 8வது மாடியில் இருந்து குதித்த பெண் என்ஜினியர்! பதற வைக்கும் சம்பவம்!

ஐடி பெண் ஊழியரொருவர் 8-வது மாடியில் இருந்து கீழே குதித்து உயிர் இழந்த சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை அம்பத்தூரில் உள்ள ஐடி எஸ்டேட் பார்க்கில் "ஐயோபெக்ஸ்" என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் நேற்றொரு ஊழியர் 8-வது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கீழே குதித்ததில் 2-வது மாடியில் இருந்த இரும்பு பலகையில் தலை மோதி ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்த பெண்ணின் பெயர் டேனிட்டா என்பது தெரியவந்துள்ளது. இவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதையும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இவருடைய தந்தையின் பெயர் ஜூலியஸ். 

நேற்று முன்தினம் இவர் ஐயோபெக்ஸ் நிறுவனத்தில் வேலைக்காக தேர்வு செய்யப்பட்டார். தன்னுடைய வேலையில் முதல் நாளான நேற்று காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை பணிபுரிந்துள்ளார். மாலை 6:45 மணியளவில் 8-வது மாடியிலிருந்து எமர்ஜன்ஸி எக்ஸிட் வழியாக கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த தகவல் காவல்துறையினர் கட்டுப்பாட்டு அறைக்கு மாலை 7:30 மணியளவில் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் அறிந்தவுடன் காவல்துறையினர் விரைந்து சென்றனர். பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர். 174-வது பிரிவில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.