அரசியல் ஆலோசகர் என்ற பெயரில் தி.மு.க.வில் நுழைந்த பிரசாந்த் கிஷோர் வகுத்துக்கொடுக்கும் திட்டங்கள் எல்லாமே தனிமனித வழிபாட்டுக்கு மட்டுமே சரியாக உள்ளது, கட்சியை குழி தோண்டி புதைத்துவிடும் என்று டென்ஷன் ஆகிறார்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
தி.மு.க.வை அழிக்கும் ஐபேக் முடிவுகள்... அதிர்ச்சியில் மூத்த நிர்வாகிகள்.
காரணம் இருக்கிறது. கடந்த எம்.பி தேர்தலில் அபரிமிதமான வெற்றியை ருசித்த திமுக, அதே வெற்றியை வரும் சட்டமன்றத் தேர்தலிலும் அறுவடை செய்ய திட்டமிட்டுள்ளது. எம்.பி தேர்தலின்போது ஏற்படுத்தப்பட்ட கூட்டணியை தொடரவும் முடிவு செய்திருந்தது. ஆனால் திமுகவின் தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் அள்ளிவிடும் கதைகளை நம்பி, இப்போது திமுக தலைமை கடும் விறைப்பு காட்டுவதாகக் கூறப்படுகிறது.
’தனித்துப் போட்டியிட்டாலே தமிழகத்திலும், புதுவையிலும் ஆட்சியைப் பிடிக்கலாம்’ என்கிற ஐபேக்கின் ஆலோசனையை நம்பி, அதற்கான முதல் அடியை புதுவையில் திமுக எடுத்து வைத்திருக்கிறது. புதுவையில் தற்போது வரையில் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுக, வரும் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துவிட்டது.
வன்னியர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இந்த மாநிலத்தில் முதலமைச்சர் வேட்பாளராக அதே சமூகத்தை சேர்ந்த ’பசையுள்ள பார்ட்டி’ ஜெகத்ரட்சகன் எம்.பியை களமிறக்க தீர்மானித்துள்ளது. பெரும் தொகையை அள்ளியிறைத்து புதுவையில் ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம் என கணக்குப் போட்டு காய்நகர்த்தி வருகிறது திமுக.
ஏற்கனவே 15 சீட்டுகள் மட்டுமே தரப்படும் என்கிற திமுகவின் நிபந்தனை தமிழக காங்கிரஸ் பிரமுகர்களை சூடேற்றியுள்ளது. இந்தநிலையில் புதுவையில் கூட்டணியை உடைப்பது, தமிழகத்திலும் காங்கிரசை கழற்றி விடுவதற்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்துள்ள காங்கிரஸ் தரப்பு, கமலின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன் ரகசியமாக நடத்திவந்த பேச்சுவார்த்தைகளை இனி வெளிப்படையாக நடத்த முடிவு செய்துள்ளது.
’குறைந்த இடங்களே தரப்படும்’ என்கிற திமுகவின் கெடுபிடியால் அதிருப்தியில் இருக்கும் பிற கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், மமக போன்றவையும் மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன.
நடப்பவற்றையெல்லாம் கவனமுடன் பார்த்துவரும் அரசியல் பார்வையாளர்கள், ‘’ ஐபேக்கின் தவறான ஆலோசனையால் திமுக தன் தலையிலேயே மண்ணை வாரி போட ஆரம்பித்திருக்கிறது என்று வருத்தப்படுகிறார்கள்.
இதெல்லாம் ரொம்ப ஓவர்தாங்க.