அகில இந்திய அளவில் சிறந்த தொழில்நுட்பக் கல்லூரியாக சென்னை ஐ.ஐ.டி. தேர்வு செய்யப்பட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவின் மிகச்சிறந்த என்ஜினியரிங் காலேஜ்! அடிச்சு தூக்கிய சென்னை கல்வி நிறுவனம்!
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 2015-ம் ஆண்டு முதல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. கல்வி பயிற்சி, கற்கும் திறன், ஆராய்ச்சி பணி, தேர்வு முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்படையாக கொண்டு இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் ஆண்டுதோறும் வகைப்படுத்தப்படுகிறது.
இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரி நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதன் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 2019-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த தரவரிசை பட்டியலில் சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. மெட்ராஸ் அகில இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
தொடர்ந்து 2-வது ஆண்டாக சிறந்த தொழில்நுட்பக் கல்லூரி வளாகமாக சென்னை ஐ.ஐ.டி. முதலிடத்தில் உள்ளது. இந்த தரவரிசை பட்டியலில் மும்பை ஐ.ஐ.டி. இரண்டாவது இடத்திலும், டெல்லி ஐ.ஐ.டி. மூன்றாவது இடத்திலும் உள்ளது. மருத்துவ கல்லூரிகளில் டெல்லி எய்ம்ஸ் முதல் இடத்தையும், சட்டக் கல்லூரிகளில் பெங்களூரூ தேசிய சட்டப்பள்ளி முதல் இடத்தையும் பிடித்துள்ளது.