ரூ.399க்கு ஏர் ப்யூரிஃபையர்! மலிவு விலை சாதனத்தை கண்டுபிடித்து ஐஐடி மாணவர்கள் சாதனை!

டெல்லி: உங்கள் வீட்டில் உள்ள ஏசியில் இருந்து வெளிவரும் காற்றை சுத்திகரிக்கக்கூடிய புதிய சாதனம் விற்பனைக்கு வந்துள்ளது.


டெல்லி ஐஐடி சார்பாக, இந்த புதிய சாதனம் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலமாக, வீட்டிற்குள் காற்று சுத்திகரிப்பான் தேடி அலையாமல், ஏசி காற்றையே சுத்திகரித்து நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். விண்டோஸ் மற்றும் ஸ்பிளிட் வகை ஏசிகளுக்கும் இவை பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, இது நானோகிளின் ஃபில்டர்களால் தயாரிக்கப்பட்டதாகும். இந்தியா முழுக்க எங்கு பார்த்தாலும் காற்று மாசு அதிகரித்து வரும் சூழலில், ஏசி காற்றை சுத்திகரிக்க உதவும் இந்த சாதனம் வீட்டிற்குள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று, ஐஐடி டெல்லி குறிப்பிட்டுள்ளது. 

இதன்படி, ரூ.399 விலையில், இந்த நானோகிளின் ஏசி ஃபில்டர் வாங்கினால், பாக்கெட்டின் உள்ளே 2 ஃபில்டர்கள் இருக்கும். அவை இரண்டையும், ஒரு ஏசிக்கு பயன்படுத்தலாம். இந்த ஃபில்டர்கள், அமேசான் இந்தியா இணையதளத்திலும், நானோகிளின் ஏசி இணையதளத்திலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க ஐஐடி டெல்லியின் ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். ஐஐடி மாணவர்களின் ஆலோசனையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் நிலவும் காற்று மாசுபாட்டை கருத்தில் கொண்டு, வீட்டிற்குள்ளேயே நீங்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க உதவும் நோக்கில் குறைந்த விலைக்கு இந்த நானோ கிளீனர்களை தயாரித்துள்ளதாக, நானோகிளின் ஏசி குறிப்பிட்டுள்ளது.