எல்லாம் ஜனநாயகப்படித்தான் நடக்கும் என்பதை வெளியே காட்டிக்கொள்வதில் தி.மு.க.வை யாருமே அடித்துக்கொள்ள முடியாது. அப்படித்தான் உதயநிதி நேர்காணல் நடந்துள்ளதாக உடன்பிறப்புகள் புலம்புகிறார்கள்.
உதயநிதி மட்டும் தேர்தலில் நின்றால்... எச்சரிக்கை செய்யும் ஐபேக்

கடந்த 6 ஆம் தேதி திமுக நேர்காணலை நிறைவு செய்வதற்கு முன்பாக, விருப்ப மனு அளித்த திமுக நிர்வாகிகளைப் போல உதயநிதி ஸ்டாலினும் நேர்காணலில் கலந்துகொண்டார்.
அப்போது, பொதுச் செயலாளர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலினை உற்சாகப்படுத்தும் வகையில் சில கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்க, மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு, சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் நிச்சயம் போட்டியிட்டுதான் ஆக வேண்டுமா ?இந்த முறை போட்டியில் இருந்து விலகிக் கொண்டு, அடுத்த தேர்தலை எதிர்கொள்ளக் கூடாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தலைவர் மு.க.ஸ்டாலினின், அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டு, உதயநிதி மட்டுமின்றி, நேர்காணலின்போது உடனிருந்த முன்னணி தலைவர்கள் டி.ஆர்.பாலு, சுப்புலெட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு உள்ளிட்டவர்களும் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள். தன்னுடைய தந்தையிடம் இருந்து இப்படிபட்ட கேள்விகள் வரும் என்பதை சற்றும் எதிர்பாராத உதயநிதி, அதிர்ச்சியடைந்தபோதும் அடுத்த நிமிடங்களிலேயே சுதாரித்துக் கொண்டு திமுக தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ, அதற்கு கட்டுப்படுகிறேன் என்று சுரத்தில்லாமல் கூறிவிட்டு, விடை பெற்றிருக்கிறார்.
மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி இடையே நேர்காணலின் போது நடைபெற்ற இந்த வசனங்கள், அவர்களது குடும்பத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி போட்டியிடுவதில், தனது கணவருக்கே விருப்பம் இல்லை என்பதை கேள்விப்பட்டு, துர்கா ஸ்டாலினும் கலக்கமடைந்திருக்கிறார்.
உதயநிதி தேர்தலில் நின்றால், தேர்தலில் வேண்டத்தகாத நிகழ்வுகள் நடக்கலாம் என்று ஐபேக் எச்சரிக்கை செய்திருக்கிறதாம். அதனாலே, உதயநிதியை தடுக்க நினைக்கிறாராம் ஸ்டாலின். ஆனால், இதுவெல்லாம் சாத்தியமாகுமா என்ன..?