மகளுடன் ஸ்கூட்டர் ட்ரிப்! காய்கறி வாங்க வாக்கிங்! தலைமைச் செயலாளர் ஆன எளிய மனிதர்!

சென்னை: கருணாநிதி, ஜெயலலிதா, ஓபிஎஸ், ஈபிஎஸ் என அனைவரும் நம்பிய ஒரே ஐஏஎஸ் அதிகாரியான கே.சண்முகம், தமிழக தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பதவிக்காலம், ஜூன் 30 உடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை  தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமியே விருப்பத்துடன் பரிந்துரை செய்திருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கே.சண்முகம், தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக கடந்த 2010ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்துள்ளார்.  நேர்த்தியான நிர்வாகப் பணிகள் காரணமாக, தமிழக அரசின் நிதி நெருக்கடி பிரச்னைகளை அவர் சமாளித்திருக்கிறார். கருணாநிதி, ஜெயலலிதா, ஓபிஎஸ், ஈபிஎஸ் என அனைவராலும் பாராட்டப்பட்ட அதிகாரியாக கே.சண்முகம் இருக்கிறார். இவரது அசாத்திய ஒத்துழைப்பில்தான் அம்மா கேன்டீன்கள் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டன. 

இப்படி பல சாதனைகளை செய்துள்ள கே.சண்முகம், தற்போது தலைமைச் செயலாளர் பதவியிலும் சிறப்பாகச் செயல்படுவார் என்று, நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இதற்கிடைய சண்முகம் மிகவும் எளிமையான வாழ்க்கை முறையை கொண்டவர். நிதித்துறை செயலாளராக இருந்த போதும் ஜெயலலிதாவின் அபிமானத்தை பெற்று இருந்தும் கூட அவர் எவ்வித சர்ச்சையிலும் சிக்கியதில்லை.

தனது மகளை தினமும் கல்லூரிக்கு ஸ்கூட்டரில் அழைத்துச் சென்று விடுவது சண்முகத்தின் வழக்கம். அவர் நினைத்தால் காரில் அழைத்துச் செல்லலாம் இல்லை என்றால் டிரைவர் மூலமாக காரில் மகளை அனுப்பி வைக்கலாம். ஆனால் சண்முகம் தனது மகளை தானே ஸ்கூட்டரில் அழைத்துச் செல்லவே விரும்புவார்.

இதே போல் தினமும் காலையில் வாக்கிங் செல்லும் அவர் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை தானே பேரம் பேசி வாங்கிச் செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். புதிய தலைமைச் செயலாளருக்கான பட்டியலில் அவர் பெயர் வந்தும் கூட சண்முகம் தனது அன்றாட நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.