நியுஸ் பேப்பர் வாங்கவும் வழியற்ற வறுமை! தடைக்கல்லை படிக்கல்லாக்கிய கலெக்டரான பழங்குடிப் பெண்!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் வறுமை நிலையிலும் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று நாட்டில் பலரது கவனத்தை கவர்ந்துள்ளார்.


யூ.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் முதல் முறையாக கேரளாவைச் சேர்ந்த குருச்யா என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்ணான ஸ்ரீதன்யா சுரேஷ் அகில இந்திய அளவில் 410-வது இடத்தைப் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். 

இவரின் பெற்றோர் தினக் கூலிகள். ஐ.ஏ.எஸ். படிப்புக்கு முக்கிய அம்சமான செய்தித்தாள் வாங்கக் கூட முடியாத சூழலில் ஸ்ரீதன்யா இந்த நிலையை எட்டி இருக்கிறார். ஐ.ஏ.எஸ் நேர்காணலுக்காக டெல்லி செல்வதற்குக்கூட பணம் இல்லாத நிலையில், நண்பர்கள் பலரிடம் கடனாகப் பெற்ற 40,000 ரூபாயுடன் டெல்லிக்கு சென்று நேர்முகத் தேர்வில் பங்கேற்று வென்றிருக்கிறார்.

கேரளாவின் பழங்குடி சமூகத்திலிருந்து முதல்முறையாக ஒருவர் ஐ.ஏ.எஸ் தேர்வில் வென்றிருக்கிறார் என்பது, பலருக்கு உந்து சக்தியாக இருக்கும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ஸ்ரீதன்யாவின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் அவரின் கனவை நனவாக்கியுள்ளதாகவும், அவருக்கும் அவரின் குடும்பத்துக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். ஸ்ரீ தன்யா எதிர்காலத்தில் சிறந்த வெற்றியை அடைய வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.