அவருக்கு முன்பாக நான் சாகணும்! விரதம் இருந்து உயிர் நீத்த நவயுக கண்ணகி! தகவல் கேட்டு மூச்சை நிறுத்திய கணவன்! நெகிழ்ச்சி சம்பவம்!

நோய்வாய்ப்பட்ட கணவருக்கு முன்னாள் உயிரிழக்க வேண்டும் என்று எண்ணிய மனைவி உண்ணாநோன்பிருந்து அவருடனே இறந்த சம்பவமானது ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திரா மாநிலத்தில் குண்டூர் மாவட்டம் அமைந்துள்ளது. மாவட்டத்திற்குட்பட்ட கோவாடா என்ற கிராமத்தில் கோதண்டராம சர்மா என்ற 85 வயது முதியவரும், அவருடைய மனைவியுமான அஞ்சனா தேவியும் வசித்து வந்தனர். அஞ்சனா தேவியின் வயது 82. 

அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கோதண்டராம சர்மா பூசாரியாக பணியாற்றி வந்தார். வயது மூப்பின் காரணமாக கடந்த 6 மாதங்களாக நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டு வந்தார். அவருடைய நிலையை கண்டு தாங்கிக்கொள்ள இயலாத மனைவி, அவர் இறப்பதற்கு முன்பே தானம் இறந்துவிட வேண்டும் என்று விரும்பியுள்ளார்.  

அதற்கேற்றவாறு ஒரு நாளும் உணவு உட்கொள்ளாமல் உண்ணா நோன்பிருந்துள்ளார். இதனால் அவருடைய உடல்நிலை மோசமானது. உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் இருந்து திரும்பிய பிறகும் உணவு உட்கொள்ள மறுத்துள்ளார். உறுத்தினாலும் ஒரு வாய்க்கு மேல் உணவு சாப்பிட்டதில்லை. 

3 நாட்களுக்கு முன்னர் கோதண்டராம ஷர்மா சுயநினைவை இழந்துள்ளார். இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த அஞ்சனாதேவி இறந்து போனார். சுயநினைவு திரும்பியவுடன் சர்மா மனைவியை பற்றி கேட்டுள்ளார். அப்போது அவருக்கு அஞ்சனாதேவி இறந்த செய்தி மட்டுமே கிடைத்துள்ளது.

செய்தியைக் கேட்டவுடன் அவர் வேறு யாருடனும் பேசவில்லை. சில மணி நேரத்திலேயே கோதண்டராம சர்மா இறந்து போயுள்ளார். இந்த சம்பவமானது கோவாடா கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.