கணவன் வெளிநாட்டில்! 2 குழந்தைகளுடன் நாகையில் வசித்து வந்த இளம் பெண்! உள்பக்கமாக பூட்டியிருந்த வீட்டிற்குள் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!

குழந்தைகளை கொன்று விட்டு தாயொருவர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகப்பட்டினத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நாகப்பட்டினத்தில் வடமட்டம் எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ஆரிப். இவர் ஒரு பொறியாளர் ஆவார். துபாயில் வேலை கிடைத்ததால் அங்கு சென்று பணியாற்றி வருகிறார். சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு நிலோஃபர் பர்வீன் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. நிலோஃபர் பர்வீனின் வயது 27. இவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இத்தம்பதியினருக்கு அப்ரீனா என்ற 4 வயது மகளும், அப்ரா என்ற 2 வயது மகளும் உள்ளனர். நேற்று மாலை பர்வீனின் வீடு நெடுநேரமாகியும் திறக்கவில்லை.

இதனால் சந்தேகித்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சென்றனர். அப்போது 3 பேரும் வாயில் நுரை தள்ளியவாறு சடலமாக கிடந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் 3 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததால் மனமுடைந்த நிலோஃபர் இத்தகைய முடிவை எடுத்திருப்பார் என்று அக்கம்பக்கத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவமானது நாகப்பட்டினத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.