குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி! பட்டப்பகலில் கணவன் செய்த வெறிச் செயல்!

குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை அவர் வேலை பார்க்கும் கடையில் வைத்தே கணவன் கொடூரமாக கொலை செய்துள்ளான்.


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பேருந்து நிலையத்தில் பேன்சி ஸ்டோர் ஒன்றில் பணியாற்றி வந்தவர் லதா.  இவரது கணவர் வேலுச்சாமி. இருவருக்கும் திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. 

   இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் தனது தந்தை வீடான கொண்ணகட்டு பட்டியில் கடந்த 6 மாதமாக தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார் லதா. 

   தந்தை வீட்டில் போதிய வருமானம் இல்லாததால் தனது பிள்ளைகளை பராமரிப்பு செலவுக்காக விராலிமலையில் பேருந்து நிலையத்தில் உள்ள பேன்சி ஸ்டோர் ஒன்றில் லதா வேலை பார்த்து வந்தார். 

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் தனது தந்தை வீட்டில் இருந்து தனது மகன்களுடன் பேருந்தில் வந்து விராலிமலை பேருந்து நிலையத்தில் இறங்கி கடைக்கு சென்றுள்ளார்.  இந்நிலையில் கணவர் வேலுச்சாமி அந்த  கடைக்கு வந்து தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.   

   தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கூறி கணவன் வேலுச்சாமி மனைவி லதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் லதா தனது வேலையில் கவனமாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வேலுச்சாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துள்ளார்.

 இதனை பார்த்து லதா கூச்சல் போட்டுள்ளார். அதற்குள் வேலுச்சாமி தான் வைத்திருந்த கத்தியால் மனைவி லதாவை சரமாரியாக வெறித்தனமாக குத்தி உள்ளார். இதனால் நிலை குலைந்து கடைக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு லதா விழுந்தார். 

அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்ப்பதற்குள் லதா துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை கண்ட கணவர் வேலுச்சாமி அங்கிருந்து தப்பி ஓடி விராலிமலை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.  

லதாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். நீண்ட நாட்களாக பிரிந்து இருந்த காரணத்தினால் மனைவியை தன்னுடைய வீட்டுக்கு வருமாறு வேலுச்சாமி தொடர்ந்து அழைத்து வந்துள்ளார்.

  ஆனால் லதா கணவன் குடித்துவிட்டு வந்து சண்டை போடுவதால் அங்கு செல்லாமல் தந்தை வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் தன்னுடைய மனைவி தன்னுடன் குடும்ப நடத்த வர மறுத்த ஆத்திரத்தில் இந்த கொலையை செய்துவிட்டதாக வேலுச்சாமி போலீசாரிடம் கூறியுள்ளான்.