துபாயில் கணவர் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து உடலை மீட்டு வருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு அளித்த சம்பவமானது பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18 வருட துபாய் வாழ்க்கை..! சொந்த ஊருக்கு டிக்கெட் போட்ட நிலையில் ஊரடங்கு! விரக்தியில் தொழிலாளி எடுத்து முடிவு! பிள்ளைகளுடன் தவிக்கும் மனைவி!
பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் தாலுகா அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட பேரளி அருந்ததியர் நகரில் மதுரைவீரன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு லக்ஷ்மி என்ற மனைவியும், மகேந்திரன் மற்றும் மகேஸ்வரி என 2 பிள்ளைகளும் உள்ளனர். இவர் 18 ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு வயரிங் எலக்ட்ரீசியன் பணியாற்றி வந்தார்.
2018-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு துபாயிலிருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு வந்துள்ளார். விடுமுறை முடிந்தவுடன் மீண்டும் துபாய்க்கு சென்றுள்ளார். சமீபகாலமாக அவருடைய உடல்நிலை சற்று மோசமாகி வந்துள்ளது. இதனால் சொந்த ஊருக்கு செல்லவேண்டும் என்று அவர் நிர்வாகத்தினரிடம் இருந்து விடுமுறை பெற்றுள்ளார்.
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தாக்குதலினால் துபாயிலிருந்து தாயகம் திரும்புவதில் அவர் பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து சந்தித்து வந்துள்ளார். இதனால் மதுரை வீரன் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். நேற்று முந்தினம் மன அழுத்தம் அதிகமாகி மதுரைவீரன் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த செய்தியை அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள் பெரம்பலூரிலுள்ள அவருடைய குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். தன் கணவன் இறந்த செய்தியை கேட்டவுடன் மதுரை வீரனின் மனைவியான லக்ஷ்மி பேரதிர்ச்சி அடைந்துள்ளார். அப்பகுதி முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இந்நிலையில் லட்சுமி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில் தற்கொலை செய்துகொண்டு தன் கணவனின் உடலை சொந்த ஊருக்கு மீட்டு வருமாறு எழுதியிருந்தார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.