சீன அதிபர் வருகையின்போது 6 திபெத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
500 போலீஸ்! உச்சகட்ட பாதுகாப்பு! ஆனாலும் சென்னையில் கெத்து காட்டிய திபெத்தியர்கள் 6 பேர்!
சீன அதிபர் ஜின்பிங் வருகையால் சென்னை கோலாகலமாக மாறியுள்ளது. சீன அதிபர் இன்றிரவு தங்குவதற்கு கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலான ஐடிசி கிராண்ட் சோலாவில் மிகச்சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்நிலையில் நட்சத்திர ஹோட்டலின் வாயிலில் 500க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு படைக்கு டிஜிபி பிரதீப் குமார் தலைமை தாங்குகிறார். இன்று காலை இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை சோதனை செய்வதற்காக காவல்துறை ஆய்வாளர் ஏ.கே.விஸ்வநாதன் வந்திருந்தார். சீன அதிபரை வரவேற்பதற்காக வரும் மக்கள், தகுந்த பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே சாலையோரத்தில் நிற்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர் .
உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு பின்பும் திடீரென்று, இளைஞர் ஒருவர் ஓடிவந்து கையில் மறைத்து வைத்திருந்த திபெத்திய கொடியை பறக்க விட்டு "திபெத்தியன்", "திபெத்தியன்" என்று சத்தமாக முழங்கினார். பதறிப்போன காவல்துறையினர் விரைந்து சென்று அவரை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
கிராண்ட் சோலா ஹோட்டலின் வாயிலில் நின்று கொண்டிருந்த திபெத்திய இளம்பெண்கள் அதிபருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர. காவல்துறையினர் அவர்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
காவல்துறையினர் அவர்களிடம் அடையாள அட்டையை கேட்க தவறியதால் இந்த சம்பவங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.