ஒன்று கூடி ரகசிய ஆலோசனை! தமிழகத்தில் நாச வேலைகளை அரங்கேற்ற சதி..! ராமநாதபுரம் திக்திக்!

பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட திட்டமிட்டதாக கூறி 3 பேரை காவல்துறையினர் கைது செய்த சம்பவமானது ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டினம் எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் புஹாரியா பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியின் மைதானத்திற்கு அருகே வழக்கமாக நின்றுகொண்டு சிலர் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நாச வேலைகளை செய்வதற்காக திட்டம் தீட்டி வருவதாக காவல்துறையினருக்கு இரகசியமாக தகவல்கள் கிடைத்துள்ளன.

உடனடியாக காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று நோட்டமிட்டனர். 4 இளைஞர்கள் ஒன்றாக நின்றுகொண்டு திட்டம் தீட்டி வருவதை கண்காணித்த காவல்துறையினர் அவர்களை பிடிக்க முற்பட்டனர். ஆனால் 3 பேர் மட்டுமே சிக்கினர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

3 பேரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் அவர்கள் கீழக்கரை பகுதியை சேர்ந்த பிச்சைக்கனி, கடலூர் மாவட்டத்திலுள்ள கோண்டூர் காலனி எங்கும் இடத்தை சேர்ந்த முகமது அலி, விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மணமேடு பகுதியை சேர்ந்த முகமது அமீர் என்று காவல்துறையினர் கண்டறிந்தனர். மேலும், தப்பி சென்ற ஷேக் தாவூத் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர்.

களியக்காவிளையில் சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை கொலை செய்த குற்றத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட கீழக்கரை பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ் என்பவருடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

3 பேரின் செல்போன்களையும் பறிமுதல் செய்து காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது 3 பேரும் ஐ.எஸ் அமைப்பிற்கு ஆதரவாக பல்வேறு விதமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாகவும், இளைஞர்களை மூளைசலவை செய்து தாக்குதல்களில் ஈடுபட முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் தேவிபட்டினம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் தலைமறைவாகியுள்ள ஷேக் தாவூத்தை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.