ஹோட்டலில் போலவே காரச்சட்னி செய்யவேண்டுமா? இதோ சிம்பிள் டிப்ஸ்!

இன்று நாம் பார்க்க இருப்பது காரச் சட்னி. இது இட்லி, தோசை, பூரி, பொங்கல் போன்றவைகளுக்கு நல்ல காம்பினேஷன்.


தேவையான பொருட்கள் :-

வதக்கி அரைக்க :-

- 1/2 வெங்காயம்

- 5 வரமிளகாய்-5 (காரத்துக்கேற்ப)

- 1 டேபிள்ஸ்பூன் உளுந்தம்பருப்பு

- புளி- கோலி குண்டு சைஸ்

எண்ணெய் தாளிக்க வேண்டிய பொருட்கள்:-

- 1/2 வெங்காயம்

- 3 தக்காளி

- 1/2டீஸ்பூன் கடுகு

- 1டீஸ்பூன் உளுந்து

கறிவேப்பிலை

எண்ணெய்

செய்முறை :-

எண்ணெய் காயவைத்து நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், புளி சேர்த்து வதக்கி ஆறவைக்கவும். ஆறியதும் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நைசாக அரைத்து வைக்கவும்.

மீண்டும் வாணலியில் எண்ணெய் காயவைத்து பொடியாய் நறுக்கிய மீதி வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியப்பின், தக்காளி சேர்த்து நன்கு தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மைய்ய வத்கணும். தக்காளி வதங்கியதும், அரைத்த கலவையைச் சேர்த்து, உப்பும் சேர்த்து வதக்கிவிட்டு, அரைக் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். காரம் தேவையென்றால் காரப்பொடி கொஞ்சம் சேர்க்கவும்.

இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் குறைந்த தீயில் கொதித்ததும் சட்னியை அடுப்பிலிருந்து இறக்கவும்.

கடுகு உளுத்தம்பருப்பு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை தாளித்து சட்னியில் கொட்டவும். காரசாரமான சட்னி தயார்.

குறிப்பு :- இந்த ஒரு சட்னி செய்முறையை கற்றுக்கொண்டால், நீங்கள் பலவிதமான சட்னிகள் செய்யலாம்.

ஒரு வெங்காயம் வதங்கியபின், இரண்டு தக்காளியை போட்டு வதக்கி கடைசியில் இரண்டு கை புதினா இலைகளை போட்டு வதக்கி அரைத்தால் அருமையான சுவையுடன் கூடிய புதினா சட்னி தயார். இதனுடன் அரைக்கும்போது இரண்டு ஸ்பூன் தேங்காய் ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலையை வைத்து அரைத்தால் ஹோட்டல் சங்கீதாவில் கொடுக்கும் சட்னி இதுதான்.

இதில் வெங்காயத்தைத் தவிர்த்து மூன்று தக்காளியை வதக்கி கொஞ்சம் சீரகம் சேர்த்து அரைத்தால் தக்காளி சட்னி. ஹோட்டல்களில் உளுத்தம்பருப்பிற்கு பதில் கடலைப்பருப்பை போடுவார்கள். சீரகம் சேர்க்கமாட்டார்கள். சீரகம் சேர்த்தால் நல்ல ப்ளேவருடன் ஆந்திரா சட்னி மாதிரி இருக்கும்.

இதில் தக்காளியை தவிர்த்து இன்னும் இரண்டு வெங்காயத்தை சேர்த்து போட்டு (அதற்கேற்ப காரத்தை கம்மி பண்ண வேண்டும் ஏனென்றால் வெங்காயம் காரம் தாங்காது.) அரைத்தால் வெங்காய சட்னி ரெடி.