குலதெய்வம் தெரியலையா..? ஜாதகத்தின் மூலம் கண்டுபிடிக்கும் வழி இதோ...

ஒருவரது குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காப்பது குலதெய்வங்கள். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவோ அல்லது கர்ம வினை காரணமாகவோ எது குலதெய்வம் என்றே தெரியாத சூழல் ஒரு சிலருக்கு ஏற்பட்டு விடுகிறது.


அப்படிப்பட்டவர்கள் குலதெய்வத்தை எப்படி கண்டுபிடிப்பது? ஒருவருடைய ஜாதகத்தில் சில கிரகங்களின் அடிப்படையிலும் பார்வை விழும் கிரகங்களின் அடிப்படையிலும் லக்னத்தின் அடிப்படையிலும், சந்திரனின் அடிப்படையிலும் குலதெய்வம் யாரென்று தெரிந்து கொள்ளலாம். ஜாதகத்தில் லக்னத்தில் - ஐந்தாம் வீடு, ஐந்தில் உள்ள கிரகம், ஐந்தாம் வீட்டை பார்வையிடும் கிரகம் ஆகியவற்றைப் பாருங்கள். அவற்றின் அடிப்படையிலேயே உங்கள் குலதெய்வம் இருந்திருக்கும்.உங்கள் ஜாதகத்தில் 5 ம் இடம் உங்கள் குலதெய்வத்தை குறிக்கும் இடமாகும்.

அதாவது லக்னம் என்னும் கட்டம் ஒன்று என எண்ண ஆரம்பித்து கடிகாரச் சுற்றுப்படி எண்ணி வர 5ம் இடம் குலதெய்வத்தைக் காட்டும். சரி, கட்டம் தெரிந்து கொண்டோம். தெய்வத்தை எப்படி அறிவது? 5 ல் சூரியன் இருக்க, சிவன் சம்பந்தபட்ட தெய்வம் குலதெய்வம் என்பதாகச் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம்.

சந்திரன் இருக்க சாந்த சொரூப சக்தி வடிவ அம்மன், குலதெய்வமாக இருக்கிறாள் என்று அர்த்தம். செவ்வாய் இருந்தால் முருகப் பெருமான் குலதெய்வம் என்றும், மற்றும் சக்திவடிவான அம்மன் தெய்வங்கள் குலதெய்வம் என்றும், புதன் இருக்க மகாவிஷ்ணு தொடர்புடைய ஆலயம், குலதெய்வக் கோயில் என்றும் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம்.

குருபகவான் இருந்தால் சித்தர்கள், ஞானிகள் தொடர்புடைய ஆலயங்கள், சுக்கிரன் இருந்தால் மகாலக்ஷ்மி, பெருமாள் தொடர்பான ஆலயங்கள், சனிபகவான் இருந்தால் எல்லைத் தெய்வங்கள், ஐயனார், ஐயப்பன், சாஸ்தா முதலான தெய்வங்கள் குலதெய்வம் என்று அறிந்து உணரலாம்.

ராகு இருக்க ரத்தபலி கேட்கும் தெய்வங்கள், உக்கிரமான பெண் தெய்வங்கள், எல்லை தெய்வங்கள் முதலான தெய்வங்களில் ஒன்று, குலதெய்வமாக நம்மை வழிநடத்துகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கேது இருக்க எல்லை பெண் தெய்வங்கள், கூரைகூட இல்லாத வெட்ட வெளியில் உள்ள தெய்வங்கள்,ஊருக்காக தியாகம் செய்து சாமியாக மாறியவர்கள்,சித்தர் பீடங்கள், ஜீவசமாதி அடங்கிய ஆலயங்கள் குலதெய்வ தலம் ஆகும்.

இன்னும் துல்லியமாக அறிந்து கொள்ள வேண்டும் என்றால் உங்கள் ஜாதகத்தை ஒரு நல்ல ஜோதிடரிடம் காட்டி உங்கள் குலதெய்வத்தை அறிந்து கொள்ளுங்கள்.