நாடு செழிப்பதற்காக திருப்பாவை! பெருமாளே போற்றி!

மார்கழி மாதத்தை தேவருலகின் பிரம்ம முகூர்த்த காலம் என்பார்கள். அதாவது, தேவருலகில் அதிகாலை நேரத் தொடக்கம் என்பதாகும்.


எனவேதான், இப்பூவுலகில் ஆன்மிக மாதமான மார்கழியில், அதிகாலை நேரத்தில் எழுந்து, குளிர்ந்த நீரில் குளித்து ஆலயங்களுக்குச் சென்று வணங்கி, தமிழ் தோத்திரப் பாடல்களான திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி உள்ளிட்ட தமிழ் வேதங்களைப் பாடி, இறைவனைத் தொழுவது காலம் காலமாக இருந்து வரும் பண்பாடு ஆகும்.

கலியுகத்திலே பாண்டிய நாட்டில், ஸ்ரீவில்லிபுத்தூரிலே பெரியாழ்வார் தனது திருநந்தவனத்திலே திருத்துழாய் பாத்தியமைக்க களைக்கொட்டு கொண்டு கொத்துகையில், அக்கொத்தின நிலத்தில் ஸ்ரீதேவி, பூதேவிகளின் அம்சமான ஒரு மகள் தோன்றுகிறாள். திருவாடிப் பூரத்தில் உதித்த அந்தக் குழந்தைக்கு கோதை என்று திருநாமமிட்டு வளர்த்து வருகிறார் விஷ்ணுவை தன் சித்தத்திலே கொண்ட பெரியாழ்வார்.

சிறுவயதிலேயே கண்ணனின் பக்கத்திலே தீராத பக்திப் பெருவேட்கையுடனே அவனது கதைகளை தனது திருத்தகப்பனார் செந்தமிழில் பாடும் பாசுரங்கள் வழியே கேட்டு இன்புற்ற கோதை அவனையே மணாளனாகப் பெறவேண்டும் என்ற ஆசையுடனே வளர்ந்து வந்தாள். மனிதர்கள் யாரையும் மணக்கமாட்டேன், பெருமாளைதான் மணப்பேன் என சபதம் கொண்டாள்.

வயது ஏற ஏற, பருவத்திற்குத் தகுந்தாற்போல கோதையின் ஞானபக்திகளும் வளர்ந்து வர, கடல்வண்ணனையே தன் காதலனாகக் கருதி அவன் விஷயமாக பெருவேட்கை கொண்டு அவனை அடைய வேண்டுமென்ற அவா மீதூற ஆயர் குலப்பெண்கள் போலே தானும் நோன்பு நோற்று அந்த நினைவிலேயே உயிர் வாழ்பவளாய் திருப்பாவை, நாச்சியார் திருமொழி போன்ற திவ்யப்பிரபந்தங்களை இயற்றி தன் எண்ணங்களை பகவானிடத்தில் விண்ணப்பம் செய்து வாழ்ந்து வந்தாள்.

கிருஷ்ணாவதார காலத்தில், ஆயர்பாடி கோபியர்கள் கண்ணனை அடைய மேற்கொண்ட பாவை நோன்பை மேற்கொண்டாள், ஆண்டாள். ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்த பெருமாளின் சன்னதிக்கு சென்று, அவருடைய முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டு, கையில் இருந்த பாஞ்சஜன்யம் என்னும் சங்கைப் பார்த்து மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால் எனத் துவங்கி வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை என முடியும் முப்பது பாடல்கள் பாடினாள்.

திரு என்றால் மரியாதைக்குரிய எனப் பொருள். பாவை என்றால் பெண். நமது வணக்கத்துக்குரிய பெண் தெய்வமாகிய ஆண்டாள் பெருமாளை பற்றி பாடியதால் இது திருப்பாவை ஆயிற்று. முதல் பாடல் திருப்பாவையின் நோக்கத்தை சுருக்கமாக எடுத்துச் சொல்கிறது. இரண்டு முதல் ஐந்து பாடல்கள் பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமனின் சிறப்புகளையும், ஆறு முதல் 15 பாடல்கள் ஆழ்வார்களுக்கு ஒப்பான அடியார்களை தோழிகளாக கற்பனை செய்து அவர்களை எழுப்பிக்கொண்டு கோவிலுக்கு செல்வதை எடுத்துச் சொல்கிறது.

கடைசி 15 பாடல்கள் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு பெருமாளைக் கெஞ்சும் ஆண்டாளின் மனநிலையை உணர்த்துகிறது. திருப்பாவை வைணவர்களால் பெரிதும் போற்றப்படுகிறது. இது பாகவத வரலாற்றை ஒட்டி வருவது. கண்ணனை நாயகனாகப் பெறவேண்டும் என்ற வேட்கையும், நாடு செழிக்க மழை வேண்டும் என்ற விழைவும், ஆக்கள் விருத்தியடைய வேண்டும் என்ற விருப்பமும் தன்னகத்தே கொண்டது இந்நூல்.