விநாயகர் சதுர்த்தியை தேசியத் திருவிழாவாக மாற்றியது யார் தெரியுமா? இன்னும் பல பிள்ளையார் தகவல்கள் உள்ளே!

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.


இவ்விழா மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது. அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பின்னர் பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது. பிறகு அது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது.

மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் பிறகு சுதந்திர போராட்டக் காலத்தில் தான், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார்.

அதன் பிறகு தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்தினர். ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும், ரூபாய் நோட்டுகளையும், இதன் போது வழங்கினர்.

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விடவும் மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, கோவா ஆகிய மாநிலங்களில் கூடுதல் உற்சாகத்துடன் பத்து நாட்களுக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன. இந்தியாவுக்கு வெளியே ஹிந்துக்கள் அதிகம் வாழும் நேபாளம், அமேரிக்கா, மொரீசியஸ், கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் பத்து நாட்களும் மலர்கள், மாலைகள், மோதகங்கள் என விநாயகருக்கு பிடித்தமான 16 பொருட்கள் கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. பின் விநாயகர் சதுர்த்தியின் நிறைவு நாளன்று தற்காலிகமாக நிறுவப்பட்டிருக்கும் இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.