துரைமுருகன் அதிருப்தி விவகாரம் கசிந்தது எப்படி..? மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு துரோகம் இழைத்தாரா..?

தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி கிடைக்காத காரணத்தால், கட்சியில் இருந்து வெளியேற துரைமுருகன் முடிவு செய்திருப்பதாக இன்று நாளிதழில் செய்தி வெளியானதும், உடனே மறுப்பு அறிக்கை வெளியிட்டார்.


மேலும், ஸ்டாலினுடன் கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலியும் செலுத்தினார். ’தி.மு.க.வுடன் எனக்கு இருக்கும் பந்தம் பதவி சார்ந்தது அல்ல. எம்.எல்.ஏ., - எம்.பி., - அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று இந்த இயக்கத்திற்கு வந்தவன் அல்ல துரைமுருகன். அண்ணாவின் திராவிட நாடு கொள்கைப் பார்த்து ஒரு போராளியாக 1953ஆம் ஆண்டு இந்த இயக்கத்திற்கு வந்தவன்.

நான் இதுவரை பெற்ற பதவிகள் எனக்கு கிடைக்காமல் போய் இருந்தாலும், கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து, இருவண்ண கொடியை பிடித்துக் கொண்டு கழகத்திற்காக கோஷமிட்டே இருப்பேன்’ என்று துரைமுருகன் சொன்னாலும் தி.மு.க.வினர் அவரை சந்தேகக் கண்ணுடனே பார்க்கின்றனர்.

காரணம் என்னவென்றால், அவர் காரியம் ஆகவேண்டும் என்பதற்காக ஆளும் கட்சியுடன் ரகசியமாக தொடர்பில் இருக்கிறார் என்பதுதான். ஏனென்றால், துரைமுருகன் வீட்டின் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டுத் திடல் உள்ளது. அதில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு பூங்கா அமைக்கப்பட உள்ளது.

இப்படியொரு பூங்கா வீட்டையொட்டி அமைக்கப்பட்டால், தனக்கு தொந்தரவாக இருக்கும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் வேலுமணியிடம் பேசி, அதனை நிறுத்தி வைத்தாராம்.

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு துரைமுருகன் துரோகம் இழைத்த விவகாரம் தெரிந்து ஸ்டாலின் கடும் அதிருப்தியில் இருக்கிறார். இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் டீம் ஆலோசனைப்படி துரைமுருகனுக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுக்கும் எண்ணத்தில் இல்லை. மேலும் பொதுச்செயலாளர் பதவியையும் அவருக்குக் கொடுக்க ஸ்டாலினுக்கு விருப்பம் இல்லையாம்.

இவற்றை எல்லாம் எப்படியும் பெறவேண்டும் என்பதற்காக, துரைமுருகனே தான் அதிருப்தியில் இருப்பதாகவும், பேசாமல் பா.ஜ.க.வில் சேர்ந்துவிடலாம் என்று தி.மு.க.வின் முக்கியப் புள்ளி ஒருவரிடம் பேசினாராம். அந்த விவகாரம்தான் நாளிதழில் வெளியானது என்கிறார்கள்.

என்ன நடந்தாலும் சரி, துரைமுருகனுக்கு பதவி இல்லை என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார் என்பதுதான் ஆச்சர்யம்.