கருணாநிதி கலைஞராக மாறிய வரலாறு! கருணாநிதி முதலாம் ஆண்டு நினைவு தின ஸ்பெஷல்!

முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு , திமுக தலைவரானார் கலைஞர் கருணாநிதி .


தமிழினத் தலைவர் , முத்தமிழ் அறிஞர் என அனைவராலும் பாராட்டப்படும் தலைவர் கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டுக்கு ஐந்து முறை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . மேலும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு முறை கூட தோல்வி அடையாமல் ,போட்டியிட்ட 13 முறையும் வெற்றியைப் பெற்ற ஒரே தலைவர் கலைஞர் மட்டும்தான் . 

முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் மறைவுக்குப் பிறகு திமுக கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர் கலைஞர் கருணாநிதி . 

எம்ஜிஆர் மற்றும் வைகோ ஆகியோர் திமுகவில் இருந்து வெளியேறும்போது திமுகவின் வலிமை  சற்றும் குறையாமல் பாதுகாத்தவர் கலைஞர் கருணாநிதி . 

தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் தனது கூர்மையான பேனா மூலம் பல்வேறு திரைப்படங்களுக்கு வசனம் எழுதி அவற்றை வெற்றிப்படங்கள் ஆக்கினார் .மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி, அபிமன்யு, மனோகரா, ரங்கோன் ராதா, அரசிளங்குமரி ,பாசப் பறவைகள் என பல்வேறு படங்களுக்கு வசன கர்த்தாவாக விளங்கியவர் கலைஞர் கருணாநிதி . 

அந்தக் காலத் திரைப்படங்களில் சமூகப் பிரச்சினைகள் தீண்டாமை சுயமரியாதை போன்ற பல்வேறு பிரச்சினைகளை மக்களிடையே தன் வசனத்தால் கொண்டு சென்றவர் தான் கலைஞர் கருணாநிதி . பல்வேறு நாடகங்களுக்கும்  திரைப்படங்களுக்கும் வசன கர்த்தாவாக விளங்கியவர் கருணாநிதி .

தூக்குமேடை என்ற நாடகத்தின் போது கருணாநிதிக்கு நடிகவேல் எம்ஆர் ராதா மூலம் கொடுக்கப்பட்ட பட்டம் தான் கலைஞர் . அன்று முதல் இன்றுவரை அவரை தமிழக மக்கள் கலைஞர் என்று இன்று வரை  கூறிவருகின்றனர் .