அமைச்சர் விஜயபாஸ்கரை பாராட்டத்தான் வேண்டுமா..? இவர்தான் போதிதர்மரா? திடீர் நியமனம் எப்படி இப்போது மட்டும் முடிந்தது?

24 மணி நேரமும் உழைக்கிறார் விஜயபாஸ்கர், ரோட்டில் அமர்ந்து இட்லி சாப்பிடுகிறார், இப்படியொரு அமைச்சரை பெறுவதற்கு என்ன தவம் செய்துவிட்டோம் என்று பல்வேறு பதிவுகள் வெளிவருவதைப் பார்க்க முடிகிறது. அந்த பாரட்டுகளுக்கு விஜயபாஸ்கர் தகுதியான நபர்தானா..?


இல்லை என்பதுதான் உண்மை. ஏனென்றால், மருத்துவர்கள் போராட்டத்தின்போது அவர் எப்படியெல்லாம் பேசினார், எப்படியெல்லாம் மருத்துவர்களைப் பழிவாங்கினார். இன்று ஒரு தேவை என்றதும் அவசரம் அவசரமாக ஆட்களை வேலைக்குச் சேர்க்கிறார்கள். இதைத்தானே போராட்டத்தில் முக்கியமாக மருத்துவர்கள் கேட்டார்கள். பணிச்சுமை அதிகம் என்று கெஞ்சினார்கள். ஆனால், அவர்களை வெளியூருக்கு டிரான்ஸ்ஃபர் செய்து மிரட்டத்தான் செய்தார் விஜயபாஸ்கர். 

ஆனால், இப்போது ஒரே உத்தரவில் 530 மருத்துவர்கள், ஆயிரம் செவிலியர்கள், 1508 ஆய்வக நுட்புணர்கள் அமர்த்துவதற்கு உத்தரவு போடுகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அவர்தான் நிதிநிலைமை சரியில்லை, அதிகமாக சம்பளம் வாங்குகிறார்கள் என்று குற்றம் சுமத்தினார்.

ஏழாயிரத்து எழுநூறு ரூபாய் மட்டும் எங்களுக்கு எப்படி குடும்பம் நடத்தப்போதும்? எங்களுக்கும் மற்றவர்கள் போல ஊதிய உயர்வு கொடுங்கள் என்று நியாயத்திற்காக போராடிய செவிலியர்களுக்கும் நியாயம் கிடைக்கவில்லை.  

அன்று, போராட்டம் நடத்திய நர்ஸ்களோ அதே சம்பளத்துடன் இதோ கொரானாவை எதிர்த்து அர்ப்பணிப்பு உணர்வுடன் கால நேர பசி தாகம் சுக துக்கம் மறந்து ராப்பகலாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்

இன்னமும் விஜயபாஸ்கர் தன்னிலை உணரவில்லை என்பதுதான் உண்மை. ஆம், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நோயாளிகள் முன்னிலையில் தன்னிடம் மாஸ்க் தட்டுப்பாடு குறித்து தெரிவித்த டாக்டரை அதிகப்பிரசங்கித்தனமாக நடக்கிறார் என்று சொல்லி உடனடியாக அவரை தூத்துக்குடிக்கு தூக்கியடித்த துஷ்டத்தனத்தை கண்டு மருத்துவ உலகமே மனம் கலங்குகிறது

ஆனால், விஜயபாஸ்கரோ தன்னை போதி தர்மராக பாவித்து விளம்பரங்களை வெளியிட்டு வருகிறார். உண்மையான ஹீரோக்கள் இன்றைய தினத்தில் மருத்துவர்களும், எப்போதும் மக்களும்தான். 

காலம் மாறும் என்பதை அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது.