கலைஞர் குடும்பத்துக்கு 58 சொத்துக்கள் எப்படி வந்தது?.! முதல்வர் எடப்பாடி பழனிசாமி பகீர் குற்றச்சாட்டு

ரயில் ஏறி பிழைப்புக்கு வழிதேடி கருணாநிதி சென்னைக்கு வந்தார் என்று தி.மு.க. உடன்பிறப்புகள் பெருமையாகப் பேசுவார்கள். அப்படி ஒன்றுமே இல்லாமல் சென்னைக்கு வந்த கருணாநிதி குடும்பத்துக்கு இன்று 58 சொத்துக்கள் சேர்ந்தது எப்படி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார்.


ஈரோடு மாவட்டம் பவானியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர், ‘பவானி தொகுதி எனக்கு நன்றாகவே தெரியும். இந்த பகுதியில் தான் எனது ஊர் இருக்கிறது. ஆக பவானி தொகுதியையும் எடப்பாடி தொகுதியையும் இடையில் பிரிப்பது காவிரி ஆறு ஒன்றுதான். எனவே நன்கு அறிமுகமான ஈரோடு பவானி தொகுதியிலேயே முதன் முதலாக பேசுவதில் எல்லா வல்ல இறைவன் எனக்கு கொடுத்த பாக்கியமாக கருதுகிறேன்.

இன்றைக்கு முதல்-அமைச்சர் என்பது ஒரு பணி. இங்கு வருகை தந்து அமர்ந்திருக்கிறீர்களே அத்தனை பேரையும் தமிழகத்தின் முதல்-அமைச்சர்களாக நான் பார்க்கிறேன். எனவே நீங்கள் இடுகின்ற கட்டளையை நிறைவேற்றுகின்ற பணிதான் எனது பணி. ஆகவே உங்கள் பகுதியில் வாழ்ந்து மக்களோடு மக்களாக இணைந்து மக்களுடைய எண்ணங்களை முழுமையாக தெரிந்தவர் இந்த தமிழகத்தினுடைய முதல்-அமைச்சராக இன்றைக்கு பதவி வகித்துள்ளேன் என்று சொன்னால் நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும்.

ஆகவே நமது பகுதியில் என்ன பிரச்சினை இருக்கிறது. அதை எப்படி தீர்ப்பது என்று நன்கு உணர்ந்திருக்கிறேன். இன்று வேளாண் பெருமக்கள் நிறைந்த பகுதி நம்முடைய பவானி சட்டமன்ற தொகுதி. ஆகவே வேளாண் பெருமக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்ய வேண்டும். அது எங்களுடைய அரசு இன்று கவனமாக பார்த்து செயலாற்றி கொண்டிருக்கிறது.. பல ஆண்டுகாலமாக தூர்வாரப்படாமல் இருந்த ஏரிகள் எல்லாம் இன்றைக்கு தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் பெய்த நீர் முழுவதும் சேமித்து வைத்து இன்று குளம் நிரம்பி வழிவதை இன்றைக்கு பார்க்கிறோம்.

இதனால் கோடை காலத்திலும் தேவையான நீர் கிடைக்கிறது. குடிப்பதற்கு தேவையான நீர் கிடைக்கிறது. ஆகவே வேளாண் பெருமக்களுக்கும், பொதுமக்களுக்கும் தேவையான நீரை பெருக்குவதில் தமிழக அரசு இன்று முன்னுதாரணமாக திகழ்கிறது. அதேபோல் ஓடையின் குறுக்கே, நதியின் குறுக்கே தடுப்பணை கட்டுதல், பவானிசாகரிலிருந்து காலிங்கராயன் வரை தடுப்பணை கட்ட நம்முடைய அரசு திட்டமிட்டுள்ளது. பவானிசாகரில் இருந்து உபரியாக வருகின்ற நீரை ஆங்காங்கே தடுத்து நிறுத்தி அந்த பகுதியில் நிலத்தடி நீரை உயர்த்துவதற்காக பிரம்மாண்டமான திட்டத்தை நாம் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

ஸ்டாலின் மக்களை கூட்டி மக்கள் பொய் பிரசாரம் செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுக்கு முன்பே இதைப்போன்று மக்கள் கூட்டத்தை நடத்தினார். அதில் பெறப்பட்ட மனுக்கள் என்னவாயிற்று. மக்களை இதுபோன்று தொடர்ந்து அவர் ஏமாற்றி வருகிறார். தற்போது பெண்களை கூட்டி வாத்தியார் போன்று கூட்டம் நடத்தி வருகிறார். இதில் ஏதாவது பயனுள்ளது பேசி வருகிறாரா? இல்லை. அரசை பற்றியும், அரசு திட்டங்கள் பற்றியும் குறை கூறி வருகிறார். முதல்-அமைச்சர், அமைச்சர்கள் குறித்து ஊழல் புகார் தெரிவித்து உள்ளார்.

இதனால் மக்கள் குழம்பி போய் உள்ளனர். இதை தெளிவுபடுத்த வேண்டியது எங்களது பொறுப்பு. அவர் சொன்னது போன்ற டெண்டரே நடைபெறவில்லை. அப்படி இருக்கையில் எப்படி ஊழல் நடைபெறும். எனவே அவர் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்து வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் கிடைக்குமா என்று கனவு காண்கிறார். அது ஒருபோதும் பலிக்காது. அ.தி.மு.க.வை வீழ்த்த நினைக்கும் ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது.

1.86 லட்சம் கோடி மதிப்பில் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் தி.மு.க.வினர் ஈடுபட்டுள்ளனர். அப்போதைய அமைச்சராக இருந்த ராசா இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இதன்மூலம் கலைஞர் டி.வி.க்கு 200 கோடி ரூபாய் கைமாறி உள்ளது. கருணாநிதி சென்னைக்கு வரும்போது எவ்வளவு சொத்துடன் வந்தார். இன்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக உள்ளார். கலைஞர் குடும்பத்தினருக்கு மட்டும் 58 சொத்துக்கள் உள்ளது. இது எப்படி வந்தது என்று மக்கள் நீங்களே சிந்தித்து பாருங்கள் என்று கேள்வி எழுப்பி அதிர வைத்திருக்கிறார்.