தலித் பையனை எப்படி நீ காதலிக்கலாம்? பெற்ற மகளை உயிரோடு எரித்த தாய்! நாகை பதற்றம்!

தலித் சமூக இளைஞரை காதலித்ததால் மகளை எரித்து கொலை செய்த தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவமானது நாகையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாழ்மங்கலம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு உமாமகேஸ்வரி என்ற 17 வயது இளம்பெண் வசித்து வந்தார். இவர் அப்பகுதிக்கு அருகேயுள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். உமா மகேஸ்வரி அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்ற 22 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார். 

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுடைய காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் உமா மகேஸ்வரிக்கு அவருடைய பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.  இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் தாய்க்கும், மகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின் இறுதியில் தாயின் பேச்சை மகள் மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தலித் இளைஞனை திருமணம் செய்ய வேண்டாம், ஊர் நம்மை ஏற்காது என்று தாய் பழையை பல்லவியை பாட, அதனை ஏற்க முடியாது என்று கூறிய மகேஸ்வரி தான் ராஜ்குமாரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு இரவு உறங்கியுள்ளார்.

இதனால் அதிகாலையில் உமா மகேஸ்வரியின் தாயார், மகளின் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்து எரித்துள்ளார். அதே போன்று தன் மீது மண்ணெண்ணையை ஊற்றிகொண்டு தீ வைத்து கொண்டுள்ளார். தீ காயங்களினால் அலறிய இருவரையும் அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அமர்வு நீதிபதி இருவரிடமும் மரண வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டார். மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த வண்ணம் உள்ளது. இந்த சம்பவமானது நாகை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.