திமுக காலில் விழுந்த கம்யூனிஸ்ட்! இரண்டுக்கே தோழர்கள் பணிந்த பின்னணி! கமல் ஏமாந்த கதை!

திமுக


திங்களன்று தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் பேச்சுவார்த்தை நடந்தது. 2 தொகுதி போதாது என்று முறுக்கிக்கொண்டு போனவர்கள், இன்று மீண்டும் அதே தொகுதிகளை பெற்றுக்கொண்டதற்குப் பின்னே கமல்ஹாசன் கதை இருக்கிறது.

திங்களன்று இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகளுக்கு சீட் ஒதுக்கிவிட வேண்டும் என்று திட்டம் தீட்டியிருந்தார் ஸ்டாலின். அதன்படி முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போனது. இரண்டு சீட் கொடுக்கப்படும் என்று போனில் உறுதி அளித்த காரணத்தால்தான் திருமா பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார். அதேபோல் இரண்டு சீட் வாங்கிக்கொண்டு வெளியேறினார்கள்.

அதன்பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போய், அவர்களுக்கு உரிய இரண்டு சீட்டை வாங்கிக்கொண்டார்கள். அதுவும் சுமுகமாக முடிவடைந்தது. அதன்பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டது. விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இரண்டு எனும்போது எங்களுக்கு மூன்று வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. அதற்கு வாய்ப்பே இல்லை என்றதும், நாங்கள் பேசிவிட்டு வருகிறோம் என்று வெளியேறினார்கள். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைவிட ஒரு சீட் அதிகம் பெறவேண்டும் என்பதுதான் அவர்களுக்கு மேலிடத்தில் இடப்பட்டிருந்த ஒரே கட்டளை. அப்படியில்லை என்றால் கமல்ஹாசனுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கலாம் என்று பிரகாஷ் காரத் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதனாலே வெளியே வந்து பேச்சுவார்த்தை நடந்தது.

கமல்ஹாசனுடன் கூட்டணி வைத்தால் நமது உண்மையான வாக்கு வங்கி வெளியே தெரிந்துவிடும், அதன்பிறகு எந்தத் தேர்தலிலும் யாரிடம் போய் நிற்க முடியாது என்ற உண்மையை நிர்வாகிகள் வெளிப்படையாகப் பேசினார்கள். அதேபோன்று பாஜ.க. கூட்டணிக்கும் போகமுடியாது என்பதால் வேறு வழியில்லை என்பதை உணர்ந்தார்கள்.

இதுதான் உண்மை நிலை என்பதால், பேசாமல் தி.மு.க.விடம் போய் கொடுப்பதை வாங்கிக்கொள்வோம் என்று பேசிமுடிக்கப்பட்டது. அதனாலே விடிந்ததும் விடியாததுமாக ஓடிவந்து இரண்டு சீட் கொடுத்தால் போதும் என்று வாங்கிக்கொண்டு புறப்பட்டார்கள். நேற்றைய நிகழ்வைப் பார்த்து கொஞ்சமாய் சந்தோஷப்பட்ட கமல்ஹாசன் இன்று அதிர்ந்து நிற்கிறார்.

தோழர்கள்ன்னா சும்மாவா..?