பகவானின் கோரைப் பற்களிலிருந்து உருவான துங்க பத்ராவிற்கு அப்படி என்ன தனி சிறப்பு!

ஹிரண்ய கசிபுவின் சகோதரர் ஹிரண்யாட்சகன் ஒரு சமயம் இந்த பூமியையே கடலுக்கடியில் கொண்டு ஒளித்து வைத்தபோது பகவான் வராஹ அவதாரம் எடுத்து ஹிரண்யாட்சகனை அழித்து பூமியை மேலே கொண்டுவந்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.


பூமி என்றால் நிலப்பரப்பும் நீர்ப் பரப்பும் சேர்ந்தது. அப்படி இருக்கையில் பூமியை எப்படி கடலுக்குள் எடுத்துச் சென்று ஒளித்து வைத்திருக்க முடியும்? ஆனால் நிலமும் நீரும் சேர்ந்த அதாவது நீரால் சூழப்பட்ட நிலப்பகுதியுடன் கூடிய பூமியை ஆகாச த்ரவ்யம் எனும் வேறு ஒரு கடற் பகுதியில் பூமிக்கு அப்பால் உள்ள வேறு ஒரு பகுதியில் ஒளித்து வைத்திருந்தான் ஹிரண்யாட்சகன். அந்த ஆகாசத்ரவ்யப் பகுதியிலிருந்துதான் பகவான் போராடி பூமியை தனது கோரைப் பற்களில் ஏந்தி வந்தார்.

அப்படி வந்தவர் சற்றே இளைப்பாறுவதற்காக ஒரு மலையின் உச்சிக்கு சென்று அமர்ந்தார். அப்படி அமர்ந்த வனம் போன்ற பச்சை பசேல் என்ற மலைப் பகுதிதான் வராஹ மலை, வராஹ பர்வதம் என்று அழைக்கப்படுகிறது. தற்போதைய ஸ்ய்யாத்ரி பகுதிதான் அது. சிருங்கேரிக்குத் தெற்கே உள்ளது இப்பகுதி.

அப்போது பகவானின் பற்களில் இடது புறம் இருந்த ஒன்று உடைந்து அதிலிருந்து வெளிப்பட்ட நீர் கிழக்கு நோக்கி நதியாகப் பாய்ந்தது. இதுதான் பத்ராவதி. வலது புறக் கோரைப்பல் உடைந்து மேற்கு நோக்கி பாய்ந்த நீர் துங்கா நதியாகப் பாய்ந்தது. இந்தத் துங்காவும், பத்ராவும் ஷிமோகாவிற்கருகில் ஒன்று சேர்ந்து வடக்கு நோக்கி துங்கபத்ரா நதியாகத் தன் பயணத்தை தொடர்கிறது. அப்படி துங்காவும், பத்ராவும் சேரும் இடத்திற்கு கூட்லி என்று பெயர்.

இந்த இடத்தில்தான் ஸ்ரீ பிரஹல்லாதராஜர் சாலக்கிராமத்தால் ஆன ஸ்ரீ நரசிம்ம சுவாமியை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அஹோபிலத்தில் பகவான் வக்ஷ ஸ்தலத்திலிருந்து எடுத்துத் தந்த சாலக்கிராமம், இங்கே கூட்லியிலே பிரஹல்லாதரால் பிரதிஷ்டையாகியுள்ளது. ஷிமோகா பக்கம் செல்பவர்கள் இந்த சிந்தாமணி நரசிம்மரை கட்டாயம் தரிசிக்க வேண்டும்.

ஸ்ரீ பிரஹல்லாத அவதாரத்தில் துங்கபத்ரா நதி தீரத்தில் கூட்லியில் ஸ்ரீ சிந்தாமணி நரசிம்மரை பிரதிஷ்டை செய்தது போல் ஸ்ரீ வியாஸராஜ அவதாரத்திலும் இதே துங்கபத்ரா நதி தீரத்தில் ஹம்பி க்ஷேத்ரத்தில் அதிசயத்தக்க விதத்தில் ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்திருக்கிறார்.

ஸ்ரீ பிரஹல்லாதராஜர் கூட்லியில் ஸ்ரீ நரசிம்ஹரைப் பிரதிஷ்டை செய்து அங்கிருந்து துங்கபத்ரா நதி ஓடும் வாக்கிலேயே பல இடங்களுக்கு சென்று பின்னர் மலைகள் சூழ்ந்த துங்கபதராவின் அழகான பகுதிக்கு சங்கு கர்ண தேவதையாக இருந்த பொழுது பார்த்து ரசித்த இடத்திற்கு துங்கபத்திரா நீரைக் கடந்து தீவைப் போன்ற சற்றே மேடான பகுதிக்கு வந்தார். இந்த இடத்தில்தான் பிரஹல்லாதர் தவம் மேற்கொண்டார்.

இந்த காரணங்களால் தான் இன்றைய நவ பிருந்தாவனத்திற்கு இத்தகைய இத்தனை மகத்துவம்.