வாடகை வீடு..! தனிமை..! 22 வயது திவ்யா உடம்பில் 33 இடங்களில் காயம்! ஹவுஸ் ஓனர் வசந்தா பகீர் வாக்குமூலம்!

ஆந்திராவில் தனியாக வசித்து வந்த இளம்பெண் ஒருவரை அவரது வீட்டு உரிமையாளர் பெண்ணே கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


22 வயது திவ்யா என்ற இளம்பெண் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர். இவர் தனியாக வசந்தா என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு கடந்த 8 மாத காலமாக தங்கி இருந்தார். இந்நிலையில் இளம்பெண் திவ்யா கடந்த சில தினங்களுக்கு முன்பாக மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மர்மமாக உயிரிழந்த அவரின் உடலை கைப்பற்றி மர்ம நபர்கள் ஒரு சிலர் யாருக்கும் தெரியாமல் புதைப்பதற்கு எடுத்து சென்றுள்ளனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் இருந்து திவ்யாவின் உடலை கைப்பற்றினர்.

திவ்யாவின் உடலை கைப்பற்றிய போலீசார் உடனடியாக அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனையின் முடிவில் திவ்யாவின் உடலில் 33 இடங்களில் காயங்கள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து திவ்யா வசித்து வந்த வீட்டின் உரிமையாளர் பெண்ணான வசந்தாவை போலீசார் விசாரணை செய்துள்ளனர். விசாரணையின் பொழுது வசந்தா முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்திருக்கிறார். இதனால் சந்தேகம் அதிகரித்த போலீசார் அவரை கிடுக்கிப்பிடி விசாரணை செய்துள்ளனர்.

அப்பொழுது வசந்தா தான் திவ்யாவை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டிருக்கிறார். சமூக விரோத செயலுக்கு திவ்யாவை அழைத்த போது அந்தப் இளம்பெண் ஒப்புக் கொள்ளாததால் அவரை பல நாட்களாக துன்புறுத்தி கொலை செய்து விட்டதாக வசந்தா வாக்குமூலத்தில் கூறி இருக்கிறார். இதனையடுத்து போலீசார் திவ்யா வசித்து வந்த வீட்டின் உரிமையாளரான வசந்தாவை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் . மேலும் இந்த வழக்கு குறித்த விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.