குருவுக்கு மரியாதை தரும் ஆசிரியர்தினம் இப்படித்தாங்க உருவாச்சு..!

ஆசிரியர் தினம் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் நாளன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.


ஆசிரியராகப் பணியைத் தொடங்கி இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை தான் நாம் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். ராதாகிருஷ்ணன் அவர்கள் கடந்த 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் நாள் தமிழ்நாட்டில் உள்ள திருத்தணி என்னும் இடத்தில் பிறந்தார். இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். மேலும் சிறந்த தத்துவஞானியும் ஆவார்.

ராதாகிருஷ்ணனை அவரது தந்தையார் பூஜாரியாக மாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டார் . ஆனால் அந்த ஆசையை எதிர்த்து ராதாகிருஷ்ணன் வேலூரிலும் திருப்பதியிலும் தன்னுடைய பள்ளி படிப்பினை தொடர்ந்தார். இதனையடுத்து மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் தன்னுடைய தத்துவவியல் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் தத்துவவியல் பாடத்தை முதன்மையாக எடுத்து படித்து அதில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இதனையடுத்து சென்னை பிரசிடன்சி கல்லூரி மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். 

பணியாற்ற ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே மாணவர்களின் அன்பை சம்பாதித்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மிகவும் புத்திசாலியான ஆசிரியர் எனவும் பெயர் பெற்றார். மாணவர்கள் மீது அவர் காட்டிய அன்பிற்கும் மற்ற ஆசிரியர்களுக்கு கற்பித்தலுக்கு ஒரு உதாரணமாக இருந்தமைக்கு நன்றி பாராட்டும் விதமாக இவரது பிறந்தநாளை ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் நாம் கொண்டாடி வருகிறோம். 

கடந்த 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் நாள் ராதாகிருஷ்ணன் அவர்கள் இவ்வுலக வாழ்வை நீத்தார். அவர் மறைந்தாலும் அவர் புகழ் என்றும் மறையவில்லை என்பதற்கு சான்றாக 1984ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.