அம்மன் சிலை வடிவிலில்லாமல் அரூவமாக அருள்பாலிக்கும் குகைக்கோயில்!

வைஷ்ணவ தேவி கோவில், இந்தியாவின் இந்து மத புனித கோயில்களில் ஒன்று. இது ஒரு கத்ராவின் திரிகுடா மலைதொடரின் மேல் 1700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.


ஜம்மு காட்ரா நகரில் இருந்து 46 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவில் இந்து மத தாய் வைஷ்ணவ தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு குகை கோவில். குகையின் நீளம் சுமார் 30 மீட்டரும், உயரம் 1.5 மீட்டரும் கொண்டது.

உடலுக்கும் உள்ளத்திற்கும் நிறைவை தரக்கூடிய ஒரு புண்ணிய தலம் தான் அம்மனின் சக்தி பீடங்களில் மிகவும் முக்கியமானதும், இந்தியாவின் வட எல்லையில் உள்ள அம்மன் தலமான வைஷ்ணவிதேவி ஆலயம். இங்கு அம்மன் சிலை வடிவில் இல்லாமல் அரூபமாக துர்கை, லட்சுமி, சரஸ்வதி என மூன்று கோலங்களில் ஒரே மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கிறாள்.உங்கள் பிரார்த்தனை எதுவாக இருந்தாலும் தேவியின் தர்பாரில் அங்கீகரிக்கப்படும் என்பதே இவளின் தனி சிறப்பு.

தட்சன் யாகம் செய்யும்பொழுது சிவபெருமானை அழைக்காமல் அவமானம் செய்தான். ஆனால் பராசக்தி யாகத்திற்கு சென்றாள். அன்னையையும் தட்சன் அவமதித்ததால் சக்தி கோபத்தில் யாககுண்டத்தில் விழுந்து இறந்துபோனாள். அப்போது சிவபெருமான் மகாசக்தியின் உடலை கையில் ஏந்தி ருத்ரதாண்டவம் ஆடினார். அப்போது கிருஷ்ணன் சிவனின் கோபத்தை தணிக்க சக்தியின் உடல் மீது தனது சக்ராயுதத்தை எறிந்தார். அது உடலை துண்டு துண்டாக்கியது. அவ்வாறு விழுந்த ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு சக்திபீடமாகியது. அதில் ஒன்றே ஜம்மு வைஷ்ணவிதேவி கோயிலாகும்.

இன்னொரு கதைப்படி, ஜாஸ்துமல் என்ற பக்தருக்கு மகளாக பிறந்து வளர்கிறாள் அன்னை வைஷ்ணவி தேவி. அவள் அழகில் கவரப்பட்டு அவளை அடைய துரத்துகிறான் பைரவன் என்ற அரக்கன். அவனிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள ஒரு குகைக்குள் சென்று ஒளிந்துக் கொள்கிறாள் தேவி. அங்கு தன்னுடைய சுய ரூபம் வெளிப்பட்டு குகையின் வாயிலில் வைத்தே அரக்கனை சம்ஹாரம் செய்கிறாள் தேவி. சாகும் தருவாயில் மோட்சம் வேண்டிய பைரவனுக்காக இறங்கியஅன்னை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பாதம் பட்டு முக்தி அடைவான் என்று வரம் அருளுகிறாள். இன்றும் அன்னையை தரிசிக்க வரும் பக்தர்கள் குகை வாயிலை மிதித்தவாறு தான் உள்ளே நுழைகிறார்கள். மேலும் அன்னையை தரிசித்துவிட்டு திரும்பும் போது பைரவ காடிக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

கோயில் வருடம் முழுவதும் 24 மணி நேரமும் திறந்திருக்கும். இருபுறமும் பசுமைக் காடுகளுக்கு மத்தியில் 24 மணி நேரமும் "ஜெய் மாதா தி' கோஷத்துடன் பல்வேறு இன, மாநில மக்கள் நடந்து செல் வதைக் காண்பதே கண்கொள்ளாக் காட்சிதான். 7 வயது முதல் 70 வயது வரையிலானவர்கள் வைஷ்ணவ தேவியின் தரிசனம் ஒன்றே குறிக்கோளாக பரவசமாக செல்வர்.

நடை பயணத்தில் நாம் பவித்ர கங்கா நதியை கடக்க வேண்டும். தன்னை நாடி வரும் பக்தர்களைப் புனிதப்படுத்த வேண்டும் என்பதற்காக தேவியே அம்பெய்து நதியை உற்பத்தி செய்ததாக ஒரு செவி வழி புராணச் செய்தி உண்டு. வழியில் சரண்பாதுகா என்ற இடம் உள்ளது. இங்கு மாதா தேவி பக்தர் களை பின் தொடர்ந்து அரக்கன் வரு கின்றானா என்று கண்காணித்து பாது காவல் செய்வதாக ஐதீகம் உள்ளது.

அடுத்து வருவது அர்த் குமாரி. இங்கு நாம் செல்லும் பாதையில் ஒரு குகை இருக்கிறது. குகைக்குள் நுழைந்து அங்குள்ள தேவ கன்னிகை விக்ரகத்தை தரிசித்து பின்னர், பயணத்தை தொடர வேண்டும். அர்த் குமாரியில் இருந்து நடந்தால் மாதா வைஷ்ணவி தேவியின் கோயில் அமைந்துள்ள தர்பாருக்கு முக்கால் கிலோ மீட்டருக்கு முன் பஜார் உள்ளது. இங்கு தான் மாதாவை பூஜிக்க புஷ்பங்களையும், நிவேதனங்களையும் வாங்கிக் கொள்ள வேண்டும்.

தேவியை தரிசிக்கும் போது, அங்குள்ள பூஜாரி பக்தர்களுக்கு நாணயங்களை பிரசாதமாக வழங்குவார். அதை பத்திரமாக நம்முடைய வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்தால், தேவியே நம்முடன் இருக்கின்ற தைரியம் ஏற்படும். க்யூவில் நகர்ந்து செல்லும் போது 2.5 அடி உயரம், 2.5 அடி அலகம் கொண்ட சிறிய குகை போன்ற துவாரம் உள்ளது. அதில் படுத்த படி ஒவ்வொருவரும் ஊர்ந்து 38 அடி தூரம் சென்றால் மீண்டும் திறந்த வெளி வரும்.

சிறிது தூரத்தில் மீண்டும் ஒரு குகை வருகிறது. இது சற்று விஸ்தாரமானதாக இருக்கும். இங்கு தான் மாதா வைஷ்ணவி தேவியின் பிண்டிகள் எனப்படும், சிலா விக்கிரகங்கள் உள்ளன. மஹா காளி, மஹாலட்சுமி, மஹா சரஸ்வதி என்று மூன்று வடிவங்களில் மாதா அருள் பாலிக்கிறார். அங்குள்ள அகண்ட ஜோதி எப்போதும் சுடர்விட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கும். மாதா தேவிக்கு காலை, மாலை என்ற இரு வேளை பூஜை உண்டு.

மாதா தேவியின் கோயில் அடர் காடுகளுக்கு நடுவில் கடல் மட்டத்திலிருந்து 7 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளதால் கோடை காலத்தில் சென்று வரலாம்.