சென்னை அருகே பெரியபாளையத்தில் பக்தர்களின் பாவம் போக்கும் வகையில் பவானி அம்மன் அருளாட்சி செய்து வருகிறாள்.
திருமணத்தன்றே தாலியை கழற்றி அம்மனுக்கு காணிக்கையிடும் அற்புத சடங்கு நடைபெறும் கோயில்!

சென்னையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் பெரியபாளையம் உள்ளது. அங்கு அருள்மிகு ரேணுகாதேவி பவானி பெரியபாளையத்து அம்மனாக கொலு வீற்றிருக்கிறாள். பாளையம் என்றால் படை வீடு என்று பொருளாகும். பெரியபாளையம் என்றால் பெரிய படை வீடு என்பதாகும். இங்கு அம்பிகையின் கட்டளைப்படி அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பெரியபாளையத்து அம்மனுக்குத் கோவில் ஒன்றினை எழுப்பினார்கள்.
பெரியபாளையம் ஒரு காலத்தில் எல்லாபுரம் எனப் பெயர் பெற்று இருந்தது. இப்போது அம்மன் கோயில் இருக்கும் இடத்தில், ஒரு சில மரங்கள் மட்டுமே இருந்தன. ஒருநாள், அங்கு வந்த சில வளையல் வியாபாரிகள், ஓய்வெடுப்பதற்காகத் தங்கள் வளையல்களை எல்லாம் தங்கள் தலைமாட்டிலேயே வைத்துக்கொண்டு தூங்கினார்கள்.
முழித்து எழுந்ததும், அவ்வளவு பேர்களும் அதிர்ந்தார்கள். தலை பக்கத்தில் அவர்கள் வைத்திருந்த வளையல்கள் எல்லாம் தூள் தூளாக நொறுங்கிப் போயிருந்தன. வியாபாரிகள் எல்லோரும் பயந்துபோய் நடுக்கத்தோடு, சுற்றுமுற்றும் பார்த்தார்கள். அங்கே சுயம்பு (தானாகவே உண்டான) அம்பிகை வடிவம் தெரிந்தது.
அதை வியாபாரிகள் ஒரு கடப்பாரையைக் கொண்டு தோண்டிப் பார்த்தார்கள். அப்போது சுயம்பு மேலிருந்து அப்படியே ரத்தம் கொப்பளித்தது. அன்னை பெரியபாளையத்தம்மன் வெளிப்பட்ட வரலாறு இது. மூலக் கர்ப்பக்கிரகத்தில் உள்ள அம்பிகையின் தலைப்பகுதியில் வளையல்கார வியாபாரி இரும்புக் கம்பி கொண்டு துழாவியதால் உண்டான வடுவை இன்றும் காணலாம்.
இந்த அன்னைக்கு செய்யப்படும் அபிஷேகத் தீர்த்தம், தீராத நோய்களை எல்லாம் தீர்த்து வைக்கும் சக்தி படைத்தது. சுயம்பு முர்த்தியாய் எழுந்தருளியிருக்கும் அன்னையானவள் கவசம் இடப்பட்டு முன்புறமாய் அமர்ந்து இருக்க, பின்புறமாய் அன்னையின் திரு உருவம் சுத வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து தலை நாகமானது குடை பிடித்திடும் வண்ணம் அன்னையின் சந்நிதி அமைந்திருப்பது சிறப்பான அம்சமாகும்.
பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து அம்மனை வழிபாடு செய்த வண்ணம் இருக்கிறார்கள். பக்தியுடன் அம்மனின் பெயரைக் கூறி வரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீப காலமாக நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கிறது.
இங்கு மற்ற இடங்களில் காண இயலாத வித்தியாசமான சிறப்பு ஒன்று உண்டு. அது அம்மனுக்கு பிரியமான வேப்பிலைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட வேப்பிலை சரத்தை உடம்பில் கட்டிக்கொண்டு ஆலயத்தை சுற்றி வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள் என்பதுதான். பெரியபாளையத்து அம்மன் ஒரு கையில் சக்ராயுதமும் மற்றொரு கையில் கபாலக்கிண்ணமும் ஏந்தி நிற்கிறாள்.
இந்த கபாலக்கிண்ணத்தில் மகாலட்சுமி, துர்க்கை, சரஸ்வதி ஆகிய மூவரும் அடங்கி இருப்பதாக தத்துவம் உண்டு. அதனால் உலக வாழ்க்கைக்கு தேவையான செல்வம், கல்வி, உடல் சக்தி (வீரம்) மூன்றையுமே அன்னை வழங்குகிறாள் என்பது நம்பிக்கை.
உலக மக்கள் அனைவரையும் காத்தருளும் வண்ணம் அன்னையானவள் நான்கு கரங்கள் கொண்டு திகழ்கின்றாள். வலது முன்புறக் கரத்தில் சக்தி ஆயுதமும் பின்புறக் கரத்தில் சக்ராயுதமும் ஏந்தப்பட்டுள்ளன. இடது முன்புறக் கையில் கபாலமும் பின்புறக் கையில் சங்கும் ஏந்தப்பட்டுள்ளன. இடது முன்புற கையில் ஏந்தப்பட்டுள்ள கபாலத்தில் மூன்று தேவிகளும் இருப்பதாக கூறப்படுகின்றது.
பவானி அம்மனின் முக அமைப்பு எல்லோரையும் கவர்ந்து இழுத்திடும் வண்ணம் அமைந்துள்ளது. எடுப்பான மூக்கும், அதில் மின்னி ஒளிர்ந்திடும் மூக்குத்தியும், இதழ்களில் தவழும் புன்னைகையும், அன்னையைப் பார்ப்பவர்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் இருக்கிறது. அவளுக்கு அணிவிக்கப்பட்டு இருக்கும் பட்டுப்புடவையும், ஆபரணங்களும் அவளின் தெய்வீக எழில் தோற்றத்துக்கு மேலும் அழகினைச் சேர்க்கின்றன.
அம்பிகையின் பக்தர்கள் தங்கள் திருமணத்தின்போது ஒரு புதிய சடங்கு ஒன்றினை நடத்தி வருகின்றனர். திருமணத்தன்று மணமகன் மணமகளுக்கு கட்டிய தாலியைக் கழற்றி அம்பாளுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். பின் அன்னையின் அருள் மிகுந்து இருக்கும் மஞ்சளும், மஞ்சள் கயிறும் பெற்றுக்கொண்டு, அதனை, அருளும் நீண்ட ஆயுளும் தருகின்ற அன்னையின் அருள் பிரசாதமாக பெண்கள் தங்கள் கழுத்தில் கட்டிக்கொள்வதை இன்றும் காண முடிகிறது.
இப்படி தாலி காணிக்கை செலுத்துவதால் காணிக்கை செலுத்தியவர்களின் குடும்பம் தழைத்து ஓங்குவதோடு அப்பெண்களின் கணவர்களுக்கு நீண்ட ஆயுள் தந்து தாலிக்கு வலிமையைத் தந்தருளும் அன்னையாக பவானி அம்மன் திகழ்கின்றாள்.
பெரியாபளையம் அன்னை பவானி அம்மன் பரமசிவனின் அட்டமூர்த்திகளில் ஜலமூர்த்தியான `பவர்' என்ற அம்சத்தின் தேவி என்று கருதப்படுகிறார். வாழ்வின் வடிவமாய், வாழ்விற்கு மூலமாய், வாழ்வினை அளிப்பதாய் உள்ளது தண்ணீர். தண்ணீருக்கு அத்தன்மையை அளித்து, திகழும் அன்னை பவானி, தன்னை வழிபடும் அன்பர்கட்கு வாழ்வினை அளிப்பவள் என்று கருதப்படுகிறார்.
இவ்வுலகில் எது பொய்த்தாலும், பவானியின் அருள் பொய்ப்பதில்லை. வைசூரி, காலரா போன்ற கொள்ளை நோய்களிலிருந்து மக்களைக் காத்தருளும் அன்னை இவள். உயிர்ப்பலி இடுவது தடை செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் இவ்வன்னைக்கு ஆடு, கோழி முதலியவற்றை உயிருடன் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.