உங்கள் பிள்ளை மருத்துவரா.. கலெக்டரா..? ஜாதகத்தில் பார்த்து தெரிஞ்சுக்கோங்க!

கல்வி என்பது ஓர் அழியாச் செல்வம். கல்வியைப் பற்றி ஆன்றோர்கள், சான்றோர்கள், அறிஞர் பெருமக்கள் பலவகையாக சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.


உயர்கல்வி பயின்று பட்டம் பெற்று, அதிலும் ஆராய்ச்சி பட்டம், டாக்டர் பட்டம் பெற்று சம்பாதித்து வளமான வாழ்க்கை வாழ ஜோதிட ரீதியாக நமக்கு என்ன அம்சம் உள்ளது? நம் ஜாதக அமைப்பின்படி என்ன படிக்கலாம்? நமக்கு என்ன தொழில், உத்யோகம் அமையும் என்பதை ஜோதிட சாஸ்திரம் தெள்ளத் தெளிவாக கூறுகிறது.

ஜோதிடத்தில் கல்வி நிலை ஜாதகம் என்று எடுத்துக் கொண்டால் எல்லா ஸ்தானங்களும் ராஜ கிரகங்களும் பலம் பெறுவது அவசியமாகும். நவகிரகங்களின் பலம் முக்கியம்.

நான்காம் வீட்டை கல்வி ஸ்தானம் என்றும், ஐந்தாம் வீட்டை அறிவு ஸ்தானம் என்றும், இரண்டாம் வீட்டை வாக்கு ஸ்தானம் என்று கூறுவார்கள். ஒருவருடைய ஜாதகத்தில் இந்த இடங்கள் கெடுதலாக இருந்தாலும், இந்த இடங்களில் பாவிகள் அமையப் பெற்று காணப்பட்டாலும் மற்றும் புதன் கெட்டு இருந்தாலும் உயர்கல்வி அமைவதில்லை. வாக்கு ஸ்தானதிபதி உச்சம் பெற்ற ஜாதகங்கள் மட்டும்தான் உயர்கல்வியையும், பட்டக்கல்வியையும் பெறுகிறார்கள்.

2, 4 போன்ற இடங்களில் சனி, ராகு, கேது, செவ்வாய் போன்ற கிரகங்கள் அமையப்பெற்றால் உயர்கல்வி அமைய தடை உண்டாகிறது. அதுபோல வாக்கு ஸ்தானத்தில் புதன் பலம் பெற்ற ஜாதகங்கள் பட்டப்படிப்பு மட்டுமல்ல, மேற்பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெறும் நிலையும் உண்டாகிறது.

அதேபோல் 2ல் புதன் பலம் பெற்று இருந்தும், புதனுடன் ராகு சேர்க்கை ஏற்படும்போதும் பட்டப்படிப்பு மேற்கொள்ள தடை ஏற்படுகிறது. 2, 4, 5 போன்ற இடங்களில் குரு, சுக்கிரன், புதன் போன்ற சுப கிரகங்கள் அமர்ந்து சுபர் பார்வை பெற்றால் உயர்கல்வி, பட்டக்கல்வி மற்றும் மேற்பட்டக்கல்வி போன்ற நற்பலன்கள் அமையப் பெறுகிறது. கல்விக்குரிய காரகன் நின்ற ஸ்தானத்தில் புதனுக்கு கேந்திரம் 4, 7, 10 பெற்றாலும் உயர்கல்வி அமையப் பெறுகிறது.

பொறியாளர் (என்ஜினியர்) : ஒருவருடைய ஜென்ம லக்னத்திற்கு 4ம் இடத்தில் செவ்வாய் ஆட்சி உச்சம் பெற்ற ஜாதகர்களுக்கு பொறியியல் கல்வி அமையப் பெறுகிறது. செவ்வாய், புதன் சேர்க்கை பெற்று குருபார்வை உண்டானாலும் பொறியியல் யோகம் உண்டாகும். மேலும், செவ்வாய் மற்றும் புதன் பரிவர்த்தனை அடைந்தாலும், செவ்வாய் சாரத்தில் புதன் வீற்றிருந்து, புதன் சாரத்தில் செவ்வாய் காணப்பட்டாலும் பொறியியல் கல்வி யோகம் உண்டாகிறது.

10ம் இடத்தில் செவ்வாய் பலமாக வீற்றிருந்து, 4ம் இடத்தைப் பார்வை செய்தாலும் பொறியியல் கல்வி பெறும் யோகம் கிட்டுகிறது. பொறியியல் கல்விக்கு செவ்வாய் முக்கிய அங்கம் வகிக்கிறார்.

மருத்துவர் (டாக்டர்) : ஜாதகத்தில் 9, 10, 11ல் கேது அமையப்பெற்று இருந்தாலும், மருந்துக்குரிய காரகனாகிய சந்திரன் உச்சம் பெற்று காணப்பட்டாலும், சூரியன் மற்றும் செவ்வாய் இணைந்து காணப்பட்டாலும், மேலும் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை அடைந்தாலும் மருத்துவக்கல்வி அமையப்பெறுகிறது. சூரியன் காரத்தில் செவ்வாய் அமையப்பெற்று, 9ம் இடம் நன்றாக அமையப்பெற்ற ஜாதகர்கள் வெளிநாடு சென்று மருத்துவக்கல்வி பயில்வார்கள்.

ஐ.ஏ.எஸ் : ஒருவருடைய ஜென்ம லக்னத்திற்கு 2, 10ல் செவ்வாய் மற்றும் சனி ஆட்சி பெற்ற ஜாதகர்கள் ஐ.ஏ.எஸ். பட்டம் பெறுகிறார்கள். ஐ.ஏ.எஸ். படிப்புக்கு செவ்வாய் முக்கிய அங்கம் வகிக்கிறது. 9ல் சந்திரன் அமைந்து குருபார்வை பெற்றாலும் ஐ.ஏ.எஸ். தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து முதன்மையாகத் திகழ்வார்கள்.

ஆடிட்டர் படிப்பு : ஆடிட்டர் படிப்புக்கு புதன் பலம் பெற வேண்டும். சூரியன் மற்றும் புதன் கன்னியில் அமையப்பெற்றாலும், சூரியன் மற்றும் புதன் ஜென்ம லக்னத்திற்கு 2ல் காணப்பட்டாலும், 2ல் உள்ள சூரியன் புதனைக் குருபார்வை செய்தாலும் பி.காம், எம்.காம்., சி.ஏ. போன்ற கல்வி அமையப்பெறுகிறது. புதன் ஆட்சி உச்சம் பெற்று குருபார்வை பெற்றால் கணக்கில் அவர் புலி என்றே கூறலாம்.

தத்துவ மேதை : வாக்கு ஸ்தானாதிபதியும், புதனும் வலிமையுடன் அமையப்பெற்று லக்ன கேந்திரத்தில் இருந்தால் தத்துவ மேதைக்குரிய கல்வியைப் பெறுவார்கள்.

சினிமா துறையில் ஜொலிக்க: கேமராமேன், எடிட்டிங், சவுண்ட் இன்ஜினியர், டைரக்டர் ஆகிய துறைகளில் நுழைய புதன், சுக்கிரன், செவ்வாய், ராகு ஆகிய கிரகங்கள் பத்தாம் இடத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும்.