இந்தியாவிலேயே சத்யநாராயண பூஜை தினமும் நடக்கும் ஒரே கோயில் இதுதான்!

ராஜமந்திரியிலிருந்து கிழக்காக தர்மாவரம் வழித்தடத்தில் சுமார் 82 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது அன்னாவ்ரம். அன்னி வரம் (அனைத்து வரம்) கிடைக்கும் கோயில் என்பதால் அன்னாவரம் என்று பெயர் பெற்றுள்ளது.


இக்கோயில் சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் எழுப்பப்பட்டதாம். இந்தியாவிலேயே சத்தியநாராயண பூஜை தினசரி நடைபெறும் கோயில் இதுதான். இந்தக் கோவிலில் பெரிய மீசையுடன் கையில் தனுர்பாணத்துடன் லட்சுமி சமேதராக சிவபெருமானுடன் நின்றபடி தரிசனம் அளிக்கிறார் ஸ்ரீவிஷ்ணு. தமிழகத்திற்கு முருகன் எப்படியோ அப்படித்தான் ஆந்திரா, தெலுங்கானா மக்களுக்கு சத்தியநாராயணனும். குடும்பத்தில் எந்த ஒரு சுபகாரியம் நடைபெற்றாலும் அதில் சத்தியநாராயண பூஜை கண்டிப்பாக இடம்பெறும்.

ஸ்ரீ வீரவெங்கட சத்யநாராயணசுவாமி கோயில் ரத்னகிரி மலையடிவாரத்தில் கடல் மட்டத்தில் இருந்து 300 அடி உயரத்தில் உள்ளது. பக்தர்களின் எந்த ஒரு வேண்டுதல்களையும் நிறைவேற்றும் கோவிலாக உள்ள அன்னாவரம் ஆந்திராவில் திருப்பதி அடுத்து அதிக வருமானம் ஈட்டித்தரும் கோவிலாக உள்ளது.

ரத்னகிரி மலை மேருவின் மகன் எனவும் பத்ராசல மலையின் சகோதரன் எனவும் நம்பப்படுகிறது. மலைகளின் அரசனான மேருவுக்கு வெகு நாட்களாக குழந்தை செல்வம் இல்லாமல் இருந்திருக்கிறது. இதனால் மனமுடைந்த மேரு பிரம்மதேவனை நோக்கி தவம் இருக்கிறான். தவத்தை மெச்சும் பிரம்மதேவன், ராமர் – சீதையையும், சத்தியநாராயணன்-சத்யவதியையும் சுமக்க அவனுக்கு இரு மகன்கள் பிறக்க வரம் அளிக்கிறார். மேருவின் மகன்களில் பத்ரன், ராமர்-சீதையை சுமக்கும் பத்ராசல மலையாகவும், ரத்னன், சத்யநாராயணந்-சத்யதேவியை சுமக்கும் ரத்னகிரி மலையாகவும் உறைகின்றனர் என்பது நம்பிக்கை.

ஈரங்கி பிரகாச ராவ் என்ற பக்தரின் கனவில் தோன்றிய ஸ்ரீவிஷ்ணு, தான் சத்தியநாராயணனாக ரத்னகிரிமீது புதைந்து இருப்பதாகவும், தன்னை வெளியே எடுத்து அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யும்படியும் கேட்டாராம். அதன்படி ஈரங்கி பிரகாச ராவ், ஜமீன்தாரிடம் சென்று இதைச் சொன்னாராம். ஜமீன்தாரும் சில ஆட்களை ரத்னகிரி பகுதிக்கு அனுப்பி சத்யநாராயண மூர்த்தத்தைத் தேடியிருக்கிறார். எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. அப்போது அந்தப் பகுதியின் கிராம தேவதையான நெருளியம்மா சுவாமி மூர்த்தம் இருக்கும் திசையைக் காண்பித்தாளாம். அனைவரும் அங்கு சென்று மண்ணைத் தோண்டிய போது பிரம்மன், சிவன், விஷ்ணு இணைந்த வடிவமாக பெரிய உருவமாய் நின்ற கோலத்தில் உள்ள சத்யநாராயண சுவாமி மூர்த்தம் கிடைத்ததாம்.

அனைவரும் பயபக்தியுடன் மூர்த்தத்துக்கு பூஜைகள் செய்து எடுத்து வந்து அன்னாவரத்தில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். பிறகு உடனடியாக மூர்த்தம் கிடைத்த இடத்தில் மண்ணுக்குள் மகா நாராயண யந்திரமும், அதன்மீது விஷ்ணு பஞ்சாயத யந்திரமும் நிறுவி அதற்கு மேல் ஸ்ரீ சத்ய நாராயண சுவாமிக்கு கோயிலை அமைத்திருக்கிறார்கள்.

சிறிது காலம் கழித்து அந்த மலையிலேயே ராமர் சீதை மூர்த்தங்களும் கிடைத்துள்ளன. அந்த மூர்த்தங்களும் கோவிலின் ஒரு தனி சந்நிதியில் வைத்து வழிபடப்படுகின்றன. ரத்னகிரி மலை மீது நான்கு புறமும் சக்கரங்கள் அமைக்கப்பட்ட மேடை மீது ரதம் நிற்பதைப் போல ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது இக்கோவில். சுற்றிலும் பெரிய மதில் இருக்கிறது.

இந்தக் கோவிலில் இரண்டு கருவறைகள் உள்ளன. மேல்தளத்தில் உள்ள கருவறையில் ஸ்ரீ வீரவெங்கட சத்யநாராயண சுவாமியை தரிசித்து அப்படியே படி வழியாக கீழே இறங்கி வந்து கீழ் கருவறையில் சிவபெருமான் சத்ய தேவியுடன் எழுந்தருளியுள்ள சத்திதேவரை தரிசிக்க வேண்டும் என்பது மரபு. மேல்தளத்தில் உள்ள கருவறை மிகவும் வித்தியாசமானதாக உள்ளது. மூர்த்தம் 12 அடி உயரத்தில் பிரமாண்டமாக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் போல மீசை வைத்துக்கொண்டு கையில் வில் ஏந்தியபடி நின்றிருக்கிறார்.

இவர் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவரின் மொத்த வடிவமாக வழிபடப்படுகிறார். இந்தக் கோவிலின் பிரதான வழிபாடு சத்தியநாராயண பூஜை. இங்கு வந்து சத்தியநாராயண பூஜை செய்து வழிபட்டால் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். சத்தியநாராயண பூஜை நடைபெறுவதற்கென்றே இங்கு பல மண்டபங்கள் உள்ளன. சில மண்டபங்கள் ஒரேசமயம் 50 பேர் அமர்ந்து பூஜை செய்ய கூடிய அளவில் பெரியதாக இருக்கின்றன. இந்த ஸ்தலத்தில் நடைபெறும் சத்தியநாராயண பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு வாழ்வில் அனைத்து வளங்களும் கிடைக்கும்.

இந்த கோவிலில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர் வாழ்வில் இணை பிரியாமல் பதினாறு பேறுகளும் பெற்று சிறப்புடன் வாழலாம். தினமும் காலை 6 மணியிலிருந்து ஒவ்வொரு குடும்பமாக அல்லது குழுவாக சத்யநாராயண பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். கோதுமை ரவை கேசரி நெய்வேத்தியம் செய்து பிரசாதமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஒவ்வொரு சத்தியநாராயணசுவாமி பூஜையின் போதும் அந்த பூஜையின் மகிமைகளை கதைகள் மூலம் எடுத்துரைக்கிறார்கள்.

ஸ்ரீ சத்ய நாராயண மூர்த்தம் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டிய நெருளியம்மா என்கிற கிராம தேவதை விருட்ச வடிவில் மலையடிவாரத்திலேயே நின்றிருக்கிறாள். தினமும் இவளுக்கு விளக்கேற்றி வழிபடுகிறார்கள். திருவிழா நாட்களில் இந்த விருட்சத்தை பெண் தெய்வத்துக்கு அலங்கரிப்பது போல் அலங்கரித்து ஆராதனை செய்கிறார்கள்.