அடுத்த 2 நாட்களுக்கு வெளு வெளு என வெளுக்கப் போகும் கனமழை! எங்கெங்கு தெரியுமா?

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.


வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய போது, அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் எனவும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் அவர் கூறியிருந்தார். 

மேலும் சென்னையை பொறுத்தவரை விட்டுவிட்டு லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் அவர் கூறியிருந்தார். தென்மேற்கு அரபிக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற்று சோமாலியா நோக்கி செல்ல உள்ளதால் , அதை நோக்கி கிழக்கு திசையில் காற்று செல்வதால் இங்கு பரவலாக மழை பெய்து வருகிறது எனவும் அவர் கூறியிருந்தார்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு நெல்லை, இராமநாதபுரம் , குமரி ,புதுக்கோட்டை, கடலூர் ,அரியலூர், பெரம்பலூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களை ஒட்டியுள்ள தேனி, கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியிருந்தார்.

மன்னார் வளைகுடா, மாலத்தீவு, இலட்சத்தீவு, குமரி மற்றும் தென்மேற்கு வங்கக் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை இருக்கக்கூடும். ஆகையால் அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.