சனி, ஞாயிறு, திங்கள்! 3 நாட்கள் வெளுத்தெடுக்கப் போகிறது அதி கனமழை! எங்கெங்கு தெரியுமா?

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் வரும் 30ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நவம்பர் 30, டிசம்பர் 1, டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் மித மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்ந்த புவியரசன் செய்தியாளருக்கு பேட்டி அளித்துள்ளார்.

கடலோர மாவட்டம் மற்றும் அதனை ஒட்டி அமைந்திருக்கும் மாவட்டங்களுக்கு கனமழையும் , பெரும்பகுதியான மாவட்டங்களுக்கு மிதமான மழையும், மற்றும் ஒரு சில இடங்களில் மட்டும் மிக அதிக கன மழையும் பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இலங்கையிலுள்ள தெற்கு கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீச இருப்பதால் அங்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

சென்னையில் வழக்கமாக பெய்யும் வடகிழக்கு மழை அளவை காட்டிலும் இந்த ஆண்டு குறைவாக தான் மழை பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 59 சென்டிமீட்டர் பதிவு ஆனது. 

ஆனால் இந்த ஆண்டு இதுவரை 39 சென்டி மீட்டர் மழை தான் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மீதம் இருக்கும் நாட்களில் கடந்த ஆண்டுகளைப் போல் மழை பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.