ஜெயலலிதா சிகிச்சையில் சதி! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது பரபரப்பு புகார்!

சதி செய்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மோசமான சிகிச்சை அளித்ததாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது.


   முன்னாள் தலைமைச்செயலாளர் ராம மோகனராவ் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஜெயலலிதா சிகிச்சையில் சதி செய்திருப்பதாக கருதி எதிர் மனுதார்ர்களாக சேர்க்க ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞர் முகமது ஜாபருல்லா கான் மனு தாக்கல் செய்திருப்பது தான் இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இதுநாள் வரை ஜெயலலிதா மரண விவகாரத்தை பொறுத்தவரை சசிகலா மற்றும் அப்பலோ மட்டுமே எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

  

   இந்த நிலையில் திடீரென சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இந்த விவகாரத்தில் சிக்கியிருப்பது அரசு அதிகாரிகள் மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ அளித்த சிகிச்சைகள் குறித்து அனைத்தும் தெரிந்த நபர்கள்  சசிகலா மற்றும் ராம மோகனராவ் தான். மேலும்  ஜெயலலிதா மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றபோது ஆப்ரேசன் செய்வது, சிகிச்சைகள் வழங்குவது போன்ற மருத்துவ நடைமுறை சார்ந்த சுமார் 20 ஆவணங்களில் சசிகலாவும், ராம மோகன ராவும் கையெழுத்து போட்டிருக்கிறார்கள்.

  

    எனவே ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில் இவர்கள் இருவரும் முக்கிய பொறுப்புள்ளவர்களாக ஆணையம் கருதுகிறது. அத்துடன் ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சை குறித்து  முழுமையாக அமைச்சர்களிடம் ராம்மோகனராவ்  தெரிவித்திருந்தால், மேல் சிகிச்சைக்கான  நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் முடிவு செய்திருப்பார்கள் என்று விசாரணை ஆணையம் கருதுகிறது.  ஆனால்  ராம மோகன்ராவ் ஆணையத்தில் அளித்த சாட்சியம் வேறுமாதிரியாக இருக்கிறது.

  

    அதாவது ஜெயலலிதாவிற்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் வழங்க வேண்டிய சிகிச்சைகள் குறித்தும எழுத்துப்பூர்வமாக அப்போது ஜெயலலிதாவின் பொறுப்புகளை நிர்வகித்து வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம்  தெரிவித்துள்ளதாக ராம மோகன ராவ் ஆணையத்தில் சாட்சி கூறியுள்ளார். இதனை அடிப்படையாக கொண்டு ராம மோகன ராவ் அரசுக்கு வழங்கிய சிகிச்சை விபரங்கள், வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்வது குறித்த பரிந்துரைகளை விசாரணை ஆணையம் கேட்டிருந்தது.

  

   அதாவது தற்போதைய தலைமைச்   கிரிஜா வைத்தியநாதனுக்கு அந்த ஆவணங்களை கோரி ஆணையம் கடிதம் எழுதி இருந்தது.  அதற்கு கிரிஜா வைத்தியநாதன், ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து செல்வது தொடர்பாக ராம மோகன்ராவிடம் இருந்து எவ்வித கடிதத்தையும் அரசு பெறவில்லை என  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து சுகாதாரத்துறை செயலரிடம் கேட்டபோது, ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றால் அது இந்தியாவில் இருக்கும் அனைத்து மருத்துவர்களையும் அவமதிப்பதாகும் பதில் அளித்திருந்தார்.

  

  இது தான் தற்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆணைய கேள்விக்கு மருத்துவ ரீதியாகவும், ஜெயலலிதா உடல் நிலையை கருத்தில் கொண்டும் பதில் அளிக்காமல் அவர் அரசியல் ரீதியாக பதில் அளித்திருப்பது அவரை இந்த விவகாரத்திற்குள் இழுத்துவிட்டுள்ளது. இதே போல் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு இதயம் செயலிழந்த பிறகு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முன்னுக்குப்பின் முரணான சாட்சியம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

   எனவே  ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், அப்பலோ, ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து சதி செய்திருப்பது புலனாவதாக ஆணைய வழக்கறிஞர் கருதுகிறார்.  எனவே இவர்களை எதிர் மனுதாரர்களாக ஆணைய விசாரணையில் சேர்க்க வேண்டும் என்று விசாரணை ஆணையத்திடம் வழக்கறிஞர் ஜபருல்லா கான் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

 

    சசிகலா மற்றும் அப்பல்லோ மீது ஜெயலலிதா மரணம் குறித்து குற்றச்சாட்டு இருப்பதாக கருதி ஆணையம்  எதிர்மனுதார்ர்களாக சேர்த்துள்ளது. ஆனால் முன்னாள் தலைமைச்செயலாளர் ராம மோகனராவ் மற்றும் தற்போதைய சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  ஆகியோர் மீதும் ஆணைய வழக்கறிஞர் முகமது ஜபருல்லா கான் தானாக முன்வந்து  எதிர்மனு தாரர்களாக சேர்க்க மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடதக்கது.