உலகின் அதிவேகப் பந்து வீச்சாளர்கள் இவர் தான்! சொல்வது யார் தெரியுமா?

இங்கிலாந்து அணியின் புதுமுகமான ஜோப்ரா ஆர்ச்சரே தான் சந்தித்த பந்துவீச்சாளர்களில் மிகவும் அதிவேகமான பந்துவீச்சாளர் என்று சக வீரரான மொயின் அலி புகழ்ந்துள்ளார்.


உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும் தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. பேர்ஸ்டோ டக் அவுட் ஆனாலும், ஜேசன் ராய், ஆயின் மோர்கன், பென் ஸ்டோக்ஸ் முதலியோர் அரைசதம் அடித்து இங்கிலாந்து அணியின் ஸ்கோரை  வலுப்படுத்தினர். 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தனர்.

312 என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்கா அணியினருக்கு இங்கிலாந்து புதுமுகமான ஜோப்ரா ஆர்ச்சர் தொடக்கத்திலிருந்தே சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். முதலில் 145 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பந்து தென்னாப்பிரிக்கா நட்சத்திர வீரரான ஹஷீம் அம்லாவின் மூக்கை உடைத்தது. பின்னர் எய்டன் மார்க்கம், ஃபாப் டு பிளெஸிஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணியின் முதுகெலும்பை உடைத்தார்.

ஆட்டம் சமமாக இருந்த போது  வான் டெர் துசன் விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் பக்கம் ஆட்டத்தை திருப்பினார். அவருடைய வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாமல் தென்ஆப்பிரிக்கா அணியினர் 207 ரன்களில் சுருண்டனர். முதல் ஆட்டத்தில் ஆடிய ஜோப்ரா ஆர்ச்சர் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார். அவருடைய ஆட்டத்தைப் பற்றி சக வீரரான மொயின் அலி புகழ்ந்துரைத்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் சேர்க்கப்பட்ட உடன் எங்களின் பல மடங்காக உயர்ந்தது. மேலும் அவர் பயிற்சியின் போது பந்து வீசுவதை நாங்கள் ஜாக்கிரதையாக கையாளுகின்றோம். நான் சந்தித்த பந்துவீச்சாளர்களில் அவர்தான் மிகவும் அதிவேகத்தில் வீசக்கூடியளவிற்கு திகழ்கிறார். மேலும் கூறுகையில் முதலில் நாங்கள் பந்துவீச நினைத்து இருந்தோம். ஆனால் முதலில் பேட்டிங் செய்தது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. எனினும் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் மிகவும் திறமையாக கையாண்டனர் என்று புகழ்ந்து தன் பேட்டியை நிறைவு செய்தார்.

ஜோப்ரா ஆர்ச்சர் இதேபோன்று தாக்கத்தை ஏற்படுத்தினால் நிச்சயம் உலகக்கோப்பை கனவை இங்கிலாந்து நினைவாக்ககூடும்!!!!