2018 சிறந்த நகைச்சுவை நட்சத்திரம் இவருதான்..!

டைம்ஸ் தமிழ் நியூஸ் சார்பாக இரண்டாவது ஆண்டாக சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2018ம் ஆண்டுக்கு விருதுபெறும் சிறந்த திரைப்பட கலைஞர்களை அறிவிப்பதில் டைம்ஸ் தமிழ் பெருமைப்படுகிறது. இந்த விருதுக் கலைஞர்களை தேர்வுசெய்யும் குழுவில் சினிமா இயக்குனர்கள், நடிகர்கள், திரைப்பட விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் என 20 பேர் இடம் பெற்றுள்ளனர்.


தேர்வுக்குழுவினரால், ஒவ்வொரு விருதுக்கும் இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார்கள். டிசம்பர் 30ம் தேதி விருது பெறும் கலைஞர்களின் இறுதிப் பட்டியல் அறிவிக்கப்படும். இன்று 2018ம் ஆண்டுக்கான சிறந்த நகைச்சுவை நட்சத்திரம் யார் என்பதைப் பார்க்கலாம். .

வடிவேலு, விவேக் காலம் போன்று இப்போது படத்திற்கு காமெடி டிராக் தனியே தேவையில்லாமல் போய்விட்டது. அதனால் தமிழ்  படத்தில் நகைச்சுவை பஞ்சம் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. ரோபோ சங்கர், கருணாகரன், மயில்சாமி போன்றவர்கள் ஆங்காங்கே மிளிர்ந்தாலும் தனித்து போட்டி கொடுக்கும் அளவுக்கு எதுவும் படங்கள் அமையவில்லை.

இன்று நகைச்சுவை நட்சத்திரம் என்றால் சூரி மட்டும்தான் கண்ணுக்குத் தெரிகிறார். சிவகார்த்திகேயனில் தொடங்கிய கூட்டணி கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திரங்களுக்கும் நன்றாகவே செட் ஆகிறது. கடைக்குட்டி சிங்கம் படத்தின் கதையை நகர்த்துபவரே சூரிதான். கிட்டத்தட்ட டி.வி. சீரியல் போன்று இருந்தாலும், ஆங்காங்கே தன்னுடைய பளீச் பஞ்ச் வசனங்களால் படத்தை நகர்த்துகிறார்.

இந்த ஆண்டு அதிக படங்களில் நடித்த நகைச்சுவை நட்சத்திரம் என்றால் யோகிபாபுவைத்தான் சொல்லவேண்டும். தன்னுடைய பாடி லாங்கேஜ் மற்றும் உடல் அமைப்பைக் காட்டி சிரிக்க வைக்கிறார். ஜூங்கா படம் யோகிபாபுவுக்கு மிகச்சிறப்பாக அமைந்தது. அதேபோல் கோலமாவு கோகிலா படத்தில், கதையுடன் இணைந்த கேரக்டர் அதுவும் நயன் தாராவை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டர் என்பதால் பளீச்சென சிரிக்க முடிகிறது.

இந்த இருவருக்கும் போட்டி என்றால் மிர்ச்சி சிவாவைத்தான் சொல்ல வேண்டும். தமிழ் படம் 2வில் ஆரம்பம் முதல் கடைசி வரை தன்னுடைய ஜாலியான வார்த்தை ஜாலங்களால் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். ஆனால், படத்தின் நாயகனாகவும் இவர் இருப்பதால், இந்த விருதுபெறும் தகுதியை இழக்கிறார்.

ஆக, 2018ம் ஆண்டு சிறந்த நகைச்சுவை நட்சத்திரத்திற்கான  டைம்ஸ் தமிழ் விருதை பெறப்போவது சூரி அல்லது யோகிபாபுவில் ஒருவர்தான். இந்த இருவரில் யார் வெற்றி பெறுகிறார் என்பதை டிசம்பர் 30 அன்று அறிந்துகொள்ளுங்கள்.