நியூஸ் 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் ஹசீப் முகமது..! இஸ்லாமியர் என்பதாலா..?

நியூஸ் 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் ஹசீப் முகமது, ஒரு முஸ்லீம் என்பதாலே வெளியேற்றப்பட்டார் என்றும், விகடன் ஊழியர்களுக்காக குரல் கொடுத்த காரணத்தால் வெளியேற்றப்பட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், அவருக்காக ஆளூர் ஷாநிவாஸ் போட்டிருக்கும் பதிவு இது. நாகூர் ஹனீபாவுக்கு தொடக்க காலத்தில் திரைப்படங்களில் பாட வாய்ப்பு வந்தபோது, அவர் பெயரை 'குமார்' என்று மாற்றும்படி நிர்பந்திக்கப்பட்டதாக அவரே பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். பொதுத் தளங்களில் முக்கிய இடத்தைப் பிடிக்க வேண்டும் எனில், முஸ்லிம்கள் தம் அடையாளத்தை மாற்றியாக வேண்டும் என்னும் நெருக்கடி இங்கு நிறுவன மயப்படுத்தப் பட்டுள்ளது.

இயக்குநர் அமீர்-க்கும் இதே சிக்கல் வந்ததாக அவர் பலமுறை சொல்லியுள்ளார். அண்மையில் விகடனில் பணியாற்றிக் கொண்டிருந்த இல்யாஸ் முஹம்மது, பாஜக ஆட்சி பற்றி ஒரு கட்டுரை எழுதியபோது, அதை தன் பெயரில் வெளியிடக் கூடாது என்று நிர்பந்திக்கப்பட்டதாகவும் அதன் பிறகு வேலையையே விட்டுவிட்டதாகவும் வேதனைப்பட்டு எழுதியிருந்தார்.

'முஸ்லிம் நீக்கம்' என்பது மிக இயல்பான ஒன்றாக மாற்றப்பட்டிருக்கும் நிலையில் தான், கந்த சஷ்டி கவச விவகாரத்தில் துளியளவு கூட தொடர்பற்ற ஹசீப் முஹம்மது, அவரது பெயருக்காகவே வேட்டையாடப்பட்டிருக்கிறார்.

கந்த சஷ்டி கவசத்தை அவதித்தது முழுக்க முழுக்க இந்துப் பட்டியலில் உள்ள இளைஞர்கள் எனும் போது, ஒரு மதத்திற்குள் உள்ள முரண்பாட்டிற்காக, இன்னொரு சமயத்தில் பிறந்தவரை காரணமே இல்லாமல் பழிவாங்குவது ஏன்? பொதுச் சமூகம் இந்த அநீதியை எதிர்த்துப் பேசாமல் அமைதியாக கடந்து போவது ஏன்? கந்த சஷ்டி விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை என்னும்போது, முஸ்லிம்களை வம்புக்கு இழுத்து நபிகள் நாயகம் பற்றி கார்ட்டூன் போடப்பட்டது ஏன்?

இந்து முஸ்லிம் பிரச்சனையாக இதை மாற்றுவதில் பாஜகவுக்கு பயன் உண்டு. ஆனால், பாஜகவுக்கு எதிர் நிலையில் உள்ள ஜனநாயக சக்திகளுக்கு இதில் என்ன உண்டு? ஏன் இந்த அமைதி என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.