சஞ்சீவி மலையிலிருந்து அனுமன் மூலிகையை எடுத்து வந்ததற்கு ஆதாரம்! இன்றும் உள்ளது தெரியுமா?

நவகிரகங்களில் தனித்தன்மையும் ஆற்றலும் மிக்கவர் சனிபகவான்.


அவரால் ஏற்படும் தோஷம் கடுமையானது என்பார்கள். அனுமனை வழிபட்டால் சனியால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.

இலங்கையை ஆட்சி செய்த ராவணன் தன் தவ வலிமையால், அனைத்து கிரகங்களையும் வென்று, தனக்கு அடிமையாக்கி வைத்திருந்தான். சீதையைக் கடத்தி வந்து அசோக வனத்தில் சிறை வைத்தான். ஆஞ்சநேயர் இலங்கை சென்று இதனைக் கண்டறிந்து, ராமபிரானிடம் தெரிவித்தார். சீதையை மீட்க, ராமபிரான் இலங்கை மீது போர் தொடுத்தார்.

இலக்குவன் உட்பட ஏகப்பட்ட படைகள் மயங்கிச் சாய்ந்தன. அவர்களின் மூர்ச்சையைத் தெளிவிக்க சஞ்சீவி மூலிகையை எடுத்து வர ஜாம்பவானின் ஆலோசனைப்படி அனுமன் அனுப்பப்பட்டான். அதன் பயணத்தை வழியிலேயே நிறுத்த ஏகப்பட்ட தடைகள் எதிரிகளால் உருவாக்கப்பட்டன. எல்லாவற்றையும் கடந்து அனுமன் சஞ்சீவி பர்வதத்தை நெருங்கினான்.

சுக்ராச்சாரியார் இதனைத் தடுத்து நிறுத்த சனீஸ்வரனை அனுப்புமாறு ராவணனுக்கு அறிவுறுத்தினார்.. காலம் கடந்து விட்டது என்பதாலும், அவசரத் தேவையை கருத்தில் கொண்டும் சஞ்சீவி மூலிகையை தேடுவது கடினமாக இருந்ததால் அனுமன் சஞ்சீவி பர்வதத்தை வேரோடு பெயர்த்து எடுத்துக்கொண்டு பறந்தான்.  வழியில் சனீஸ்வரன் அவரை வழிமறித்தான். அனுமனோ தனக்கு இடைஞ்சல் செய்யும் சனீஸ்வரன் மீது கோபப்பட்டு ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லி அவனை பிடித்து காலடியில் கிடத்தி மித்த்தான். அனுமனின் பலத்தைக் தாங்க முடியாத சனிபகவான் தன்னை விட்டுவிடுக் கதறினான்.

அனுமனை வசியப்படுத்தும் மந்திரத்தை உணர்ந்த சனிபகவான், ராம நாம ஜபம் செய்யத் துவங்கினான். ராம நாம உச்சரிப்பைக் கேட்ட அனுமன், ;இனி ராம நாமத்தை உச்சரிக்கும் என் பக்தர்கள் எவருக்கும் உன்னால் தொந்தரவு எதுவும் வரக்கூடாது.  அவர்களை நீ பிடிக்கவும் கூடாது.’ என உறுதி மொழி பெற்றுக்கொண்டு சனிபகவானை விடுவித்தான்.  அது முதல் அனுமன் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை.

அனுமன் தான் சனியை அடக்கிய இடத்தில் இடது காலை ஊன்றி ஒரே தாவலில் எம்பிக் குதித்து பறந்தார். அவ்வாறு பறந்து செல்ல அடி எடுத்து வைத்த இடம் ஆம்பூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஆனைமடுகு என்னுமிடம். அங்கு ஆஞ்சநேயரின் பாதம் பதிந்த சுவடு இன்றும் காணப்படுகிறது. அந்த ஒற்றை பாதம், கோவில் என்ற அமைப்புடன் நடுகாட்டில் உள்ளது. வாரம் ஒரு முறை அங்கு சென்று விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.

ஆலயம் தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மூலவர் அமைப்பில் சுதை வடிவம்கொண்ட எளிய நுழைவாசல் இருக்கிறது. கருவறையை நேராக நோக்கினால் மூலவர் தெரிவதில்லை. உற்சவரே அழகுற காட்சி தருகின்றார். வாசல் அருகில் சென்று இடதுபுறம் நோக்கினால், பதினோரு அடி உயரமுள்ள, கருங்கல்லில் வடிக்கப்பட்ட புடைப்புச் சிற்பமாக பெயருக்கு ஏற்றபடி பெரிய ஆஞ்சநேயர், தெற்கு நோக்கி காட்சி தருகின்றார். இவரின் திருமுகம், கிழக்கு திசை நோக்கிய கோலத்தில் இருக்கிறது. இடது காலை முன் வைத்து சனியின் தலையை அழுத்தியவாறும், வலது காலை சற்றே தூக்கி சனியின் வலது காலை அழுத்தியபடியும் இந்த ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.