கர்ப்பினிக்கு HIV ரத்தம்! சாத்தூர் மருத்துவர்களை காப்பாற்ற முயற்சி! அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்!

நிறை மாத கர்ப்பினி பெண்ணுக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்கள் சிலரை காப்பாற்ற முயற்சி நடைபெற்று வருகிறது.


  சாத்தூரை சேர்ந்த கர்ப்பினி பெண் ஒருவர் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் உடலில் ரத்த ஓட்டம் குறைவாக இருப்பதாக கூறி ரத்தம் ஏற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் 3ந் தேதி சாத்தூர் அரசு மருத்துவமனையில் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. இதற்காக சிவகாசி ரத்த வங்கியில் இருந்து ரத்தம் கொண்டு வரப்பட்டு, அந்த கர்ப்பினிக்கு ஏற்றப்பட்டது-

  இந்த நிலையில் கடந்த டிசம்பர் 15ந் தேதி சாத்தூர் அரசு மருத்துவமனை செவிலியர்கள் இருவரும் கர்ப்பினியின் வீட்டுக்கே சென்று ரத்த மாதிரியை கேட்டுள்ளனர். எதற்கு என்று அந்த பெண் கேட்ட போது பரிசோதனைக்கு என்று தெரிவித்துள்ளனர். சரி, பரிசோதனைக்கு தானே என்று தனது கணவரிடம் கேட்டு விட்டு அந்த பெண் ரத்த மாதிரியை கொடுத்துள்ளார். மறுநாள் மீண்டும் பெண் வீட்டுககு வந்த செவிலியர்கள், அந்த பெண்ணின் கணவரின் ரத்த மாதிரியை கேட்டுள்ளனர்.

  இதனால் சந்தேகம் அடைந்த கணவர் சாத்தூர் மருத்துவமனைக்கு நேரில் சென்று எதற்காக தனது ரத்த மாதிரியை கேட்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு உங்கள் மனைவிக்கு HIV தொற்று இருப்பதாகவும், உங்களுக்கும் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளவே ரத்த மாதிரி கேட்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், தனது மனைவி ரத்தம் ஏற்ற வந்த போது இருந்த சான்றிதழில் அவருக்கு HIV தொற்று இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதை எடுத்து வந்து நியாயம் கேட்டுள்ளார்.

  அப்போது தான் HIV தொற்று உள்ள ரத்தத்தை உங்கள் மனைவிக்கு தவறுதலாக கடந்த 3ந் தேதி ஏற்றிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் தனது மனைவியையும், குழந்தையையும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று அழுது புலம்பியுள்ளார். HIV ரத்தம் செலுத்தப்பட்டுள்ளதால் அந்த கர்ப்பிணி எய்ட்ஸ் நோயாளியாகும் வாய்ப்பு உள்ளது- மேலும் அவரது குழந்தைக்கும் HIV தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

  இதனால் கணவனும், மனைவியும் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். எந்த தவறும் செய்யாத தனது மனைவி எய்ட்ஸ் நோயாளியாக ஏன் வாழ வேண்டும், இந்த உலகத்தையே தற்போது வரை பார்க்காத தனது குழந்தைக்கும் எய்ட்ஸ் இருக்குமோ என்று பயமாக இருப்பதாகவும் கூறி கணவர் கதறி அழுவது காண்போரை கலங்க வைப்பதாக இருக்கிறது. இதனிடையே இந்த விவகாரத்தில் ரத்த வங்கி ஊழியர்கள் மட்டுமே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

  ரத்த வங்கியில் இருந்து வரும் ரத்தத்தை உரிய முறையில் பரிசோதனை செய்யாமல் கர்ப்பினிக்கு ஏற்றிய மருத்துவர்களை பற்றிய தகவலை கூட வெளியே விடாமல் போலீசாரும், சுகாதாரத்துறையும் பாதுகாத்து வருகிறது- இந்த விவகாரத்தில் முதல் குற்றவாளியாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தனது பணியில் அலட்சியமாக இருந்து கர்ப்பினிக்கு HIV ஏற்பட காரணமாக இருந்த மருத்துவர்கள் தான் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ஆனால் அவர்களைத்தான் காப்பாற்ற முயற்சி நடைபெற்று வருகிறது.